நாட்டில் அடுத்த கட்டமாக 18 - 30 வயதுக்குட்பட்டோருக்கு தடுப்பூசி, பி.சி.ஆர். பரிசோதனைகளை அதிகரிக்க தீர்மானம் - விசேட வைத்திய நிபுணர் சமித கினிகே - News View

Breaking

Sunday, August 22, 2021

நாட்டில் அடுத்த கட்டமாக 18 - 30 வயதுக்குட்பட்டோருக்கு தடுப்பூசி, பி.சி.ஆர். பரிசோதனைகளை அதிகரிக்க தீர்மானம் - விசேட வைத்திய நிபுணர் சமித கினிகே

எம்.மனோசித்ரா

கொவிட் தொற்றுக்கான அறிகுறிகள் காணப்படுபவர்களுக்கு தொற்றினை உறுதி செய்வதற்கு அன்டிஜன் பரிசோதனைகளை முன்னெடுப்பது மாத்திரமே போதுமானது என்று விசேட வைத்திய நிபுணர்களால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனவேதான் முன்னரை விட தற்போது முன்னெடுக்கப்படும் பி.சி.ஆர். பரிசோதனைகளின் அளவு குறைவடைந்துள்ளது. எனினும் தற்போது கொவிட் மரணங்கள் சடுதியாக அதிகரித்துள்ளமையால் எழுமாறாக முன்னெடுக்கப்படும் பி.சி.ஆர். பரிசோதனைகளின் அளவை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக தொற்று நோயியல் பிரிவின் பதில் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சமித கினிகே தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், இலங்கையில் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் கடந்த ஜனவரி முதல் ஆரம்பிக்கப்பட்டது. இதன்போது சுகாதார தரப்பினருக்கு முன்னுரிமையளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 30 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

இலங்கையில் 30 வயதுக்கு மேற்பட்ட சனத் தொகை 11.5 மில்லியன் ஆகும். இதற்கு 23.5 மில்லியன் தடுப்பூசிகள் தேவைப்படுகிறது. இந்நிலையில் இதுவரையில் இலங்கைக்கு 19.5 மில்லியன் தடுப்பூசிகள் கிடைக்கப் பெற்றுள்ளன.

அடுத்த வாரத்திற்குள் எஞ்சிய தொகை தடுப்பூசிகள் கிடைக்கப் பெறவுள்ளன எனவும் அவர் கூறினார். அதற்கமைய செப்டெம்பர் மாதத்திற்குள் 30 வயதுக்கு மேற்பட்ட சகலருக்கும் தடுப்பூசி வழங்கும் பணிகள் நிறைவு செய்யப்படவுள்ளன.

இலங்கையில் இதுவரையில் 30 வயதுக்கு மேற்பட்டோரில் 48 சதவீதமானோருக்கு இரு கட்டங்களாகவும் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.

இதே போன்று மொத்த சனத் தொகையில் 5 சதவீதமானோருக்கு முதற்கட்ட தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதோடு, 25 சதவீதமானோருக்கு இரு கட்ட தடுப்பூசிகளும் வழங்கப்பட்டுள்ளன.

அடுத்த கட்டமாக 18 - 30 வயதுக்கு உட்பட்டோருக்கு தடுப்பூசி வழங்கப்படவுள்ளது. இலங்கையில் இந்த வயதெல்லைக்கு உட்பட்ட சனத் தொகை 3.2 மில்லியன் ஆகும்.

தற்போது 60 வயதுக்கு மேற்பட்டோரில் மிகக்குறைந்தளவானோர் எந்தவொரு தடுப்பூசியையும் பெறாமலுள்ளனர். இந்நிலைமையில் இதுவரையில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தவர்களில் 76 சதவீதமானோர் 60 வயதுக்கு மேற்பட்டோராவர்.

30 - 59 வயதுக்கு உட்பட்டோரில் 22 சதவீதமானோர் உயிரிழந்துள்ளதோடு, 30 வயதுக்கும் குறைவானோரில் 1.1 வீதமானோர் உயிரிழந்துள்ளனர் எனவும் அவர் கூறினார்

No comments:

Post a Comment

Post Bottom Ad