அத்தியாவசிய சேவைகளை முன்னெடுக்க மாவட்ட, பிரதேச மட்டத்தில் விசேட பொறிமுறை : கொவிட் பரவலை தடுக்க மாற்று வழி தடுப்பூசியும், சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றுதலுமாகும் - அமைச்சர் நிமல் லன்சா - News View

About Us

About Us

Breaking

Sunday, August 22, 2021

அத்தியாவசிய சேவைகளை முன்னெடுக்க மாவட்ட, பிரதேச மட்டத்தில் விசேட பொறிமுறை : கொவிட் பரவலை தடுக்க மாற்று வழி தடுப்பூசியும், சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றுதலுமாகும் - அமைச்சர் நிமல் லன்சா

(எம்.மனோசித்ரா)

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நடைமுறையிலுள்ள காலப்பகுதியில் மக்களுக்கு நெருக்கடிகள் ஏற்படாத வகையில் அத்தியாவசிய சேவைகளை முன்னெடுப்பதற்கான பொறிமுறையொன்றை மாவட்ட மற்றும் பிரதேச மட்டத்தில் நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கொவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக 10 நாட்களுக்கு அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தின் போது மக்களுக்கு நெருக்கடிகள் ஏற்படாத வகையில் அத்தியாவசிய சேவைகளை முன்னெடுப்பதற்கான பொறிமுறையொன்றை மாவட்ட மற்றும் பிரதேச மட்டத்தில் நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ வழங்கியுள்ள ஆலோசனைக்கமைய அரசியல்வாதிகளுடன் அரச அதிகாரிகள் இணைந்து செயற்படுகின்றனர்.

இந்த காலப்பகுதியில் அத்தியாவசிய சேவைகளை தடையின்றி முன்னெடுப்பதற்காக மாவட்ட மற்றும் கிராம மட்டத்திலும், கிராம உத்தியோகத்தர் பிரிவு மட்டத்தில் உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கொவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. அதற்கு மக்களும் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவார்கள் என்று நம்புகின்றோம்.

உலகலாவிய ரீதியில் கொவிட்-19 தொற்று பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதால். இதனால் அபிவிருத்தியடைந்த நாடுகள் கூட பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளன.

இலங்கையிலும் வருமானம் ஈட்டும் வழிமுறைகள் சரிவடைந்துள்ளதால் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது. இவ்வாறான பின்னடைவுகள் ஏற்பட்டாலும் பொருளாதாரத்தை முகாமைத்துவம் செய்வதற்கும், மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்த கொவிட் பரவலானது இன்னும் எவ்வளவு காலத்திற்கு தொடரும் என்பதை ஸ்திரமாகக் கூற முடியாது. இதற்கு காணப்படுகின்ற மாற்று வழி தடுப்பூசி வழங்கல் மற்றும் சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றுதலாகும்.

இலங்கையில் தடுப்பூசி வழங்கும் பணிகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த சந்தர்ப்பத்தில் சகலரும் தடுப்பூசிகளை பெற்று இதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

குறிப்பாக 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி வழங்கலுக்காக விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதால் இதற்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment