டோக்கியோ பராலிம்பிக்கில் நாளை களமிறங்கும் மூன்று இலங்கையர்கள் - News View

Breaking

Thursday, August 26, 2021

டோக்கியோ பராலிம்பிக்கில் நாளை களமிறங்கும் மூன்று இலங்கையர்கள்

(எம்.எம்.சில்வெஸ்டர்)

கடந்த 24 ஆம் திகதியன்று ஆரம்பமான டோக்கியோ பராலிம்பிக்கில் நாளைய தினம் இலங்கையர்கள் மூவர் களமிறங்கவுள்ளனர்.

இதில் இலங்கை பங்கேற்கும் முதற் போட்டியாக ஆண்களுக்கான படகோட்டப் போட்டி அமைகிறது.

டோக்கியோ ஒலிம்பிக் நிறைவடைந்ததையடுத்து, தற்போது டோக்கியோ பராலிம்பிக்கில் நடைபெற்று வருகிறது.

இந்த டோக்கியோ பராலிம்பிக்கில் இலங்கையிலிருந்து எட்டு வீரர்களும், ஒரு வீராங்கனையுமாக 9 பேர் பங்கேற்கின்றனர்.

2016 ரியோ ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான எப். 46 பிரிவின் ஈட்டி எறிதல் போட்டியில் 58.23 மீற்றர் வீசி வெண்கலப்பதக்கம் வென்ற தினேஷ் பிரியன்த இம்முறை 2 ஆவது தடவையாக பராலிம்பிக்கில் பங்கேற்கிறார்.

மேலும், ஆண்களுக்கான எப்.64 பிரிவின் ஈட்டி எறிதலில் சம்பத் ஹெட்டியாராச்சி, துலான் கொடிதுவக்கு ஆகிய இருவரும் பங்கேற்கின்றனர்.

ஆண்களுக்கான எப். 63 பிரிவின் குண்டெறிதல் போட்டியில் பாலித்த ஹல்கஹவெல, ஆண்களுக்கான பிரிவு டி47 இன் 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் சமன் சுபசிங்கவும் போட்டியிடவுள்ளனர்.

வில்வித்தைப் போட்டியின் ஆண்களுக்கான தனிநபர் ரிகேர்வ் பிரிவில் சம்பத் பண்டாரவும், ஆண்களுக்கான படகோட்டப் போட்டியின் தனிநபர் பி.ஆர்.ஐ. பிரிவில் பிரியமல் ஜயகொடியும், ஆண்களுக்கான சக்கர நாற்காலி டென்னிஸ் போட்டியில் டி.எஸ்.ஆர். தர்மசேனவும் இலங்கையை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

இதேவேளை, இம்முறை பராலிம்பிக்கில் பங்கேற்கும் ஒரேயொரு வீராங்கனையாக குமுது திசாநாயக்க விளங்குகிறார்.

இவர், பெண்களுக்கான டி47 பிரிவின் 100 மீற்றர் ஓட்டப் போட்டி மற்றும் நீளம் பாய்தல் ஆகிய இரண்டு போட்டிகளில் பங்கேற்கவுள்ளமை விசேட அம்சமாகும்.

டோக்கியோ பராலிம்பிக்கில் இலங்கை பங்கேற்கும் முதல் போட்டி நிகழ்வாக பிரியமல் ஜயகொடி பங்கேற்கும் ஆண்களுக்கான படகோட்டப் போட்டி அமைகிறது.

இப்போட்டி நாளையதினம் (27) இலங்கை நேரப்படி காலை 7.30 மணிக்கு ஆரம்பமாகும்.

இதே தினத்தன்று இலங்கை நேரப்படி காலை 8.30 மணிக்கு ஆரம்பமாகும் சக்கர நாற்காலிப் போட்டியில் டி.எஸ்.ஆர்.தர்மசேன பங்கேற்கவுள்ளார்.

இப்போட்டியில் அவர், சிலி நாட்டின் அலெக்ஸாண்டர் கெடல்டோவை எதிர்கொள்ளவுள்ளார்.

இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் மற்றுமொரு வீரரான, சம்பத் பண்டார பங்கேற்கும் வில்வித்தைப் போட்டியும் அதே தினத்தன்று முற்பகல் 11.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இதையடுத்து இலங்கைக்கு பதக்கம் பெற்று தரக்கூடியவர் என எதிர்பார்க்கப்படும் தினேஷ் பிரியன்த எதிர்வரும் 30 ஆம் திகதியன்று களமிறங்குகிறார்.

இப்போட்டி எதிர்வரும் 30 ஆம் திகதியன்று இலங்கை நேரப்படி காலை 8.30 மணிக்கு ஆரம்பமாகும்.

இதே தினத்தன்று மாலை 4.30 மணிக்கு ஆரம்பமாகும் ஆண்களுக்கான எப்.64 பிரிவின் ஈட்டி எறிதலில் சம்பத் ஹெட்டியாராச்சி, துலான் கொடிதுவக்கு ஆகிய இருவரும் பங்கேற்கின்றனர்.

எதிர்வரு 31 ஆம் திகதியன்று நடைபெறும் பெண்களுக்கான டி47 பிரிவின் 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் குமுது திசாநாயக்க போட்டியிடவுள்ளார்.

இவர் பங்கேற்கும் மற்றுமொரு போட்டி நிகழ்வான நீளம் பாய்தல் போட்டி அடுத்த மாதம் 3 ஆம் திகதியன்று நடைபெறும்.

மேலும், குறுந்தூர ஓட்ட வீரரான சமன் சுபசிங்க பங்கேற்கும் ஆண்களுன்கான டி47 பிரிவின் 400 மீற்றர் ஓட்டப்போட்டி அடுத்த மாதம் 3 ஆம் திகதியன்றும், பாலித்த ஹல்கஹவெல பங்கேற்கும் ஆண்களுக்கான பிரிவு 63 இன் குண்டெறிதல் போட்டி அடுத்த மாதம் 4 ஆம் திகதியன்றும் நடைபெறும்.

No comments:

Post a Comment

Post Bottom Ad