அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விநியோகம் தற்போது முழுவதுமாக சீர்குலையும் நிலை : அநாவசிய சலுகைகள் வழங்கப்பட்டமையின் விளைவே இது என்கிறார் முன்னாள் சபாநாயகர் கரு - News View

Breaking

Saturday, August 28, 2021

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விநியோகம் தற்போது முழுவதுமாக சீர்குலையும் நிலை : அநாவசிய சலுகைகள் வழங்கப்பட்டமையின் விளைவே இது என்கிறார் முன்னாள் சபாநாயகர் கரு

(நா.தனுஜா)

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விநியோகம் தற்போது முழுவதுமாக சீர்குலையும் நிலையில் உள்ளது. தெரிவு செய்யப்பட்ட சிலருக்கு மாத்திரம் அநாவசியமான சலுகைகள் வழங்கப்பட்டமையின் விளைவாகவே இந்நிலை ஏற்பட்டிருக்கின்றது. இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படா விட்டால், மீண்டும் நீண்ட வரிசைகளில் காத்திருக்க வேண்டிய யுகமொன்று உருவாகும் என்று முன்னாள் சபாநாயகரும், சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவருமான கரு ஜயசூரிய எச்சரித்துள்ளார்.

கரு ஜயசூரிய அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அப்பதிவில் அவர் மேலும் கூறியிருப்பதாவது, நாட்டின் ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடையும்போது, கடனுக்கும் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கும் இடையிலான விகிதாசாரம் அதிகரிக்கும்.

இவ்வாறானதொரு அதிகரிப்பு கடந்த 1988 - 1999 ஆண்டு காலப்பகுதியிலும் 2004 ஆம் ஆண்டிலும் ஏற்பட்டது. எனினும் தற்போது அந்த விகிதாசாரம் 110 சதவீதமாகக் காணப்படுவதுடன் கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் இதுவே மிகவும் உயர்வானதாகும்.

அண்மைக் காலங்களில் பதிவான பல்வேறு சம்பவங்கள் நாட்டின் பொருளாதார நெருக்கடி மாத்திரமன்றி சமூக மற்றும் அரசியல் ரீதியான நெருக்கடிகளும் காணப்படுகின்றன என்பதைப் புலப்படுத்தும் வகையில் அமைந்திருந்தன. அனைத்து விதமான நெருக்கடிகளுக்கு மத்தியிலும் ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும்.

அதேவேளை அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விநியோகம் தற்போது முழுவதுமாகச் சீர்குலையும் நிலையில் உள்ளது. சீனி முதல் அரிசி வரை அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. தெரிவு செய்யப்பட்ட சிலருக்கு மாத்திரம் அநாவசியமான சலுகைகள் வழங்கப்பட்டமையின் விளைவாகவே இந்நிலை ஏற்பட்டிருக்கின்றது.

எனவே இவ்விடயம் தொடர்பில் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, திருத்தியமைக்கப்படா விட்டால் மீண்டும் நீண்ட வரிசைகளில் காத்திருக்க வேண்டிய யுகமொன்று உருவாகும் என்று அவர் எச்சரித்துள்ளார்.

No comments:

Post a Comment