கொழும்பில் மீண்டும் குண்டுத் தாக்குதலா? சமூக வலைத்தளங்களில் பரவி வரும் செய்தி - விளக்கமளித்துள்ள இராணுவம் மற்றும் பொலிஸார் - News View

About Us

About Us

Breaking

Saturday, August 7, 2021

கொழும்பில் மீண்டும் குண்டுத் தாக்குதலா? சமூக வலைத்தளங்களில் பரவி வரும் செய்தி - விளக்கமளித்துள்ள இராணுவம் மற்றும் பொலிஸார்

(எம்.எப்.எம்.பஸீர்)

கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் குண்டு வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற வாய்ப்புள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவி வரும் நிலையில், அதில் எந்த உண்மைத் தன்மையும் இல்லை என இராணுவம் மற்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மிரிஹானை, நுகேகொடை, கல்கிசை, தெஹிவளை மற்றும் பம்பலபிட்டி பகுதிகளை அண்மித்து வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெறலாம் என மக்களை அச்சமூட்டும் வகையில் குரல் பதிவொன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

இந்நிலையிலேயே முப்படைகளின் பதில் அலுவலக பிரதானியும், இராணுவத் தளபதியுமான ஜெனரால் சவேந்ர சில்வா, பொலிஸ் குற்றவியல் மற்றும் போக்கு வரத்து விவகாரங்களுக்கான பிரதானி, பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண ஆகையோர் குறித்த தகவல் பொய்யான செய்தி என உறுதி செய்தனர்.

கடந்த 2019 ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல்களைத் தொடர்ந்து இந்த தகவல் பகிரப்பட்டிருந்ததாகவும், தற்போது அதே தகவல் மீள பகிரப்பட்டு வருவதாகவும் இராணுவ தளபதி ஜெனரால் சவேந்ர சில்வா தெரிவித்த நிலையில், மக்கள் வீண் அச்சம் கொள்ளத் தேவை இல்லை என குறிப்பிட்டார்.

இது தொடர்பில் விடயங்களை வெளிப்படுத்திய பொலிஸ் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண, குறித்த குண்டு வெடிப்பு எச்சரிக்கை தொடர்பிலான தகவல் முற்றிலும் பொய்யானது என குறிப்பிட்டார்.

அது தொடர்பில் கல்கிசை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சரின் கீழ் சிறப்பு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் அந்த தகவலானது கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 25 ஆம் திகதி நபர் ஒருவரால் அனுப்பட்ட தகவல் என்பது வெளிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அந்த தகவலை மீள சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை கண்டறியப்பட்டுள்ளதாகவும் அஜித் ரோஹண குறிப்பிட்டார்.

இந்நிலையில் மக்களை வீணாக அச்சம் கொள்ளத் தேவை இல்லை என குறிப்பிடும் பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன, விடயம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், இவ்வாறான போலியான விடயங்களை பகிர்வோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment