பெண்ணின் புகைப்படத்தினை நிர்வாண படமாக மாற்றி கப்பம் கோரிய இருவர் கைது - News View

Breaking

Saturday, August 28, 2021

பெண்ணின் புகைப்படத்தினை நிர்வாண படமாக மாற்றி கப்பம் கோரிய இருவர் கைது

(எம்.எப்.எம்.பஸீர்)

பேஸ்புக் சமூக வலைத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்த பெண்ணொருவரின் புகைப்படத்தை, நிர்வாண படமாக மாற்றி, அதனை சமூக வலைத்தளங்களில் வெளியிடாமல் இருப்பதற்காக கப்பம் கோரியதாக கூறப்படும் இருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

எம்பிலிபிட்டிய பகுதியில் வைத்து அவ்விருவரையும் கைது செய்ததாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும், கணினி மென்பொருள் தொடர்பிலான பட்டப்படிப்பினை முன்னெடுக்கும் 20 மற்றும் 23 வயதுகளை உடைய இளைஞர்கள் என சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ மேலும் குறிப்பிட்டார்.

சந்தேக நபர்களிடமிருந்து 2 கணினிகள், 2 கையடக்கத் தொலைபேசிகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ள நிலையில், அவை பூரண பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் சந்தேக நபர்களை எம்பிலிபிட்டிய நீதிவான் நீதிமன்றில் ஆஜர் செய்ய பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

பெண்களுக்கு எதிராக இவ்வாறான இணையத்தளங்கள் ஊடாகவும் சமூக வலைத்தளங்கள் ஊடாகவும் முன்னெடுக்கப்படும் குற்றங்கள் தொடர்பில் விஷேட விசாரணைகளை முன்னெடுக்க பொலிஸ் கணினி குற்றப் பிரிவு கடந்த மார்ச் 24 ஆம் திகதி விஷேட உப பிரிவொன்றினை அமைத்தது.

இந்நிலையில் அந்த பொலிஸ் பிரிவுக்கு இதுவரை இவ்வாறான குற்றங்கள் தொடர்பில் 1,912 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக பொலிஸ் பேச்ச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ கூறினார்.

No comments:

Post a Comment