(இராஜதுரை ஹஷான்)
தேர்தல் காலத்தில் நாட்டு மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் பெரும்பாலும் நிறைவேற்றப்படவில்லை. இவ்வாறான நிலை தொடர்ந்தால் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஏற்பட்ட நிலையே அரசாங்கத்திற்கு ஏற்படும். நாட்டு மக்கள் தொடர்ந்து பொறுமையாக இருக்கமாட்டார்கள் என தேசிய மரபுரிமை மற்றும் கிராமிய கலைகள் ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்தார்.
போகம்பறை சிறைச்சாலைக்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது, தேர்தல் காலத்தில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்படவில்லை. இவற்றில் மத்திய வங்கி பிணைமுறி மோசடி, ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் சம்பவத்தை பிரதானமாக குறிப்பிட வேண்டும்.
குற்றச்சாட்டுடன் தொடர்புடையவர்கள் சுதந்திரமாக உள்ளார்கள். பாதிக்கப்பட்ட மக்கள் கேள்வி எழுப்புவதும், குற்றச்சாட்டுவதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
அரசாங்கம் இவ்வாறு செயற்பட்டால் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஏற்பட்ட நிலையே ஏற்படும். மக்கள் தொடர்ந்து பொறுமையுடன் இருக்கமாட்டார்கள். ஆகவே மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற அதிகம் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment