பாகிஸ்தான் அரசு வழங்கும் உயர் கல்விக்கான புலமைப் பரிசில்கள் இலங்கையிலுள்ள அனைத்து சமூகங்களுக்குமானது : உயர் ஸ்தானீகராலயத்தின் இரண்டாம் நிலைச் செயலாளர் ஆயிஷா அபூபக்கர் பஹத் - News View

About Us

About Us

Breaking

Wednesday, August 18, 2021

பாகிஸ்தான் அரசு வழங்கும் உயர் கல்விக்கான புலமைப் பரிசில்கள் இலங்கையிலுள்ள அனைத்து சமூகங்களுக்குமானது : உயர் ஸ்தானீகராலயத்தின் இரண்டாம் நிலைச் செயலாளர் ஆயிஷா அபூபக்கர் பஹத்

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

பாகிஸ்தான் அரசு வழங்கும் உயர் கல்விக்கான புலமைப் பரிசில்கள் இலங்கையிலுள்ள முஸ்லிம்களுக்கு மாத்திரம் உரித்தானதல்ல அது இலங்கையில் வாழும் அனைத்து சமூகங்களுக்குமானது என இலங்கையிலுள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானீகராலயத்தின் இரண்டாம் நிலைச் செயலாளர் ஆயிஷா அபூபக்கர் பஹத் (AaishahAbu Bakr Fahad -Second Secretary) தெரிவித்தார்.

பாகிஸ்தான் அரசின் உயர் கல்விக்கான புலமைப் பரிசில் பரீட்சை ஏறாவூர் அலிகார் தேசியக் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை 17.08.2021 இடம்பெற்றது.

பரீட்சையின் நோக்கம் குறித்து அவர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், மூன்றாவதும் கடைசியுமான எழுத்து மூலப் பரீட்சையை இன்று பரீட்சார்த்திகள் எழுதியுள்ளார்கள். பாகிஸ்தான் இலங்கை உயர் கல்வி ஒத்துழைப்புத் திட்டத்தின் கீழ் இது இடம்பெறுகின்றது;.

5 வருடங்களுக்கு 1000 புலமைப்பரிசில்களை இலங்கை மாணவர்களுக்கு பாகிஸ்தான் வழங்குகிறது.

இந்த புலமைப் பரிசில்கள் மருத்துவத்துறை பொறியியல்துறை சமூக விஞ்ஞானம் சட்டத்துறை நுண்கலை இதேபோன்று விண்ணப்பதாரிகள் விரும்பும் வேறு துறைகளுக்கும் புலமைப் பரிசில்கள் வழங்கப்படுகின்றன.

மருத்துவத் துறையில் மேலதிகமான புலமைப் பரிசில்களையும் வழங்குமாறு இலங்கை விடுத்த வேண்டுகோள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக சமீபத்தில் இலங்கை வந்திருந்த பாகிஸ்தானியப் பிரதமர் இம்ரான்கான் அறிவித்திருந்தார்.

ஆகவே மருத்துவத்துறையில் மேலும் 100 புலமைப்பரிசில்கள் என்ற அந்த வேண்டுகோளும் நிறைவேற்றப்படுகின்றது.

புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றி அதில் தேறியவர்கள் இவ்வாண்டின் செப்ரெம்பெர் மாதம் அவர்களது உயர் கல்விப் பாடநெறிகளை பாகிஸ்தானில் தொடர முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த பரீட்சையை நடாத்துவதற்கு இலங்கை சுகாதார அமைச்சிடமிருந்து விசேட அனுமதி பெறப்பட்டிருந்தது.

முதற் தடவையாக இலங்கையில் கொழும்பு கண்டி ஏறாவூர் ஆகிய மூன்று நகரங்களில் இந்தப் பரீட்சை நடத்தப்பட்டிருக்கின்றது.

நான் இங்கே விஷேடமாகக் குறிப்பிட விரும்புவது பாகிஸ்தான் அரசும் உயர் ஸ்தானீகராலயமும் இலங்கையில் எப்போதும் மத இன நல்லிணக்கத்தைக் கருத்திற் கொண்டே செயலாற்றி வருகின்றது.

பாகிஸ்தான் சமூகங்களுக்கிடையில் மதங்களுக்கிடையில் பதற்றத்தை உண்டுபண்ணும் ஒரு தேசமல்ல.

இலங்கையில் இன மத அமைதி நிலவ வேண்டும் என்பது எமது அவாவாகும்.

இந்த உயர் கல்விக்கான புலமைப்பரிசில் வாய்ப்புக்கள் மத சமூக பால் வேறுபாடுகனைக் கடந்தது.

மேலும் நாங்கள் உயர் கல்வி நடவடிக்கைகளில் பெண்களை ஊக்குவிக்கின்றோம். இப்பொழுது நடந்து முடிந்துள்ள பரீட்சைகளில் 60 தொடக்கம் 70 வரையான விண்ணப்பதாரிகள் பெண்களாக இருக்கின்றார்கள். இது மகிழ்;ச்சியளிக்கிறது. ஆகவே நாங்கள் பெண்கள் விண்ணப்பிப்பதை ஊக்குவிக்கின்றோம்.

உயர் கல்வி ஆணைக்குழு கொரோனா வைரஸ் பரவல் தொற்று நிலைமையிலும் இந்தப் பரீட்சையை நடத்துவதற்கு பாகிஸ்தானிலிருந்து வந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.

நாங்கள் கொழும்பு பல்கலைக்கழகம் பேராதெனிய பல்கலைக் கழக்கம் தென்கிழக்குப் கிழக்கு பல்கலைக்கழகம் ஆகியவற்றின் உபவேந்தர்களோடு உயர் கல்வி மேம்பாட்டுக்காக இணைந்து பணியாற்றுவது குறித்துப் பேசியிருக்கின்றோம். எதிர்காலத்தில் அவ்வாறு சிறப்பாக இணைந்து பணியாற்ற முடியும்” என்றார்.

இந்நிழ்வில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான நஸீர் அஹமட் பாகிஸ்தான் உயர் கல்வி ஆணைக்குழுவின் திட்ட முகாமையாளர் ஜெஹான்ஷெப் கான் Jehanzeb Khan Project Director Higher Education Commission Government of Pakistan ஆகியோருட்பட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment