லெம்டா, எப்சிலோன் வைரஸ்களை நாட்டிற்குள் கொண்டுவர அரசாங்கம் முயற்சி : மரண எண்ணிக்கை தரப்படுத்தலில் பாரிய சந்தேகம் : மக்களை பலி கொடுத்து சுற்றுலாத்துறையை ஆரம்பிக்க வேண்டிய தேவை கிடையாது - ஹெக்டர் அப்புஹாமி - News View

About Us

About Us

Breaking

Friday, August 27, 2021

லெம்டா, எப்சிலோன் வைரஸ்களை நாட்டிற்குள் கொண்டுவர அரசாங்கம் முயற்சி : மரண எண்ணிக்கை தரப்படுத்தலில் பாரிய சந்தேகம் : மக்களை பலி கொடுத்து சுற்றுலாத்துறையை ஆரம்பிக்க வேண்டிய தேவை கிடையாது - ஹெக்டர் அப்புஹாமி

(இராஜதுரை ஹஷான்)

இந்திய சுற்றுலா பயணிகளை இலங்கைக்கு அழைத்து வரும் யோசனையை அரசாங்கம் மீள் பரிசீலனை செய்ய வேண்டும். சுற்றுலாத்துறை சேவை கைத்தொழிலை மேம்படுத்துவதற்காக லெம்டா, எப்சிலோன் ஆகிய வைரஸ்களை நாட்டிற்குள் கொண்டுவர அரசாங்கம் முயற்சிக்கிறது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி தெரிவித்தார்.

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், நாட்டில் அரசாங்கம் ஒன்று உள்ளதா? என்ற நிலை தற்போது தோற்றம் பெற்றுள்ளது.

கொவிட் தாக்கத்தினாலும், பொருளாதார வீழ்ச்சியினாலும் நாட்டு மக்கள் பாதிக்கப்பட்டுள்ள வேளையில் வியாபாரிகள் தங்களின் விருப்பத்திற்கு அமைய அத்தியாவசிய பொருட்களின் விலைகளை அதிகரித்துக் கொள்கிறார்கள். இதற்கு எதிராக அரசாங்கம் எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை. மாறாக விலை அதிகரிப்பை கட்டுப்படுத்த முடியாது என பொறுப்பற்ற வகையில் கருத்துரைக்கிறது.

கொவிட்-19 வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை மற்றும் பதிவாகும் மரணங்களின் எண்ணிக்கை தொடர்பில் அரசாங்கம் வெளியிடும் தரப்படுத்தலில் பாரிய சந்தேகம் காணப்படுகிறது.

கொவிட் தாக்கத்தினால் கடந்த புதன்கிழமை 198 பேர் மரணித்துள்ளார்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை தவிர்த்து, புதைக்கப்பட்ட சடலங்களின் எண்ணிக்கையினை தவிர்த்து தகனசாலைகளில் இருந்து பெறப்பட்ட தகவல்களுக்கு அமைய கடந்த புதன்கிழமை மாத்திரம் 242 பேர் கொவிட் தாக்கத்தினால் மரணித்துள்ளார்கள்.

அரசாங்கம் நாட்டு மக்களிடமிருந்து உண்மை தகவல்களை மறைக்கிறது. கொவிட் தாக்கத்தை அரசாங்கம் சிறந்த முறையில் கட்டுப்படுத்தியுள்ளது என்று நற்பெயர் பெற்றுக் கொள்வதற்காக இவ்வாறு செயற்படுவது மக்களுக்கு இழைக்கும் பெரும் துரோகமாகும்.

நாட்டில் கொவிட் தாக்கம் தீவிரமடைந்துள்ள நிலையில் அரசாங்கம் சுற்றுலாத்துறை சேவை கைத்தொழிலை மீள ஆரம்பிக்க தீர்மானித்துள்ளது. தேசிய பொருளாதாரத்திற்கு சுற்றுலாத்துறை சேவை கைத்தொழில் பெரும் பங்கு வகிக்கிறது. நாட்டு மக்களின் சுகாதார நிலை கேள்விக்குறியாக்கப்பட்டுள்ள நிலையில் சுற்றுலாத் துறையினை மீள ஆரம்பிப்பது அவதானத்திற்குரியது.

டெல்டா, அல்பா ஆகிய வைரஸ் தொற்று இந்தியா மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளின் சுற்றுலா பயணிகள் ஊடாகவே இலங்கைக்கு பரவியது என சுகாதார தரப்பினர்கள் உறுதியாக குறிப்பிட்டுள்ளார்கள். அரசாங்கம் சுகாதார தரப்பினரது கருத்துக்களுக்கு மதிப்பளிக்கவில்லை.

தற்போது இந்திய நாட்டு சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வர அனுமதி வழங்கப்படவுள்ளது. பாக்கிஸ்தான் நாட்டில் இனங்காணப்பட்ட எப்சிலோன் வைரஸ் இந்தியாவில் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில் அரசாங்கம் இலங்கைக்கு லெம்டா, எப்சிலோன் ஆகிய வைரஸ்களை இறக்குமதி செய்ய முயற்சிக்கிறது. நாட்டு மக்களை பலி கொடுத்து சுற்றுலாத்துறை சேவை கைத்தொழிலை ஆரம்பிக்க வேண்டிய தேவை கிடையாது. அரசாங்கத்தின் தீர்மானங்கள் மூர்க்கத்தனமாக காணப்படுகிறது என்றார்.

No comments:

Post a Comment