இலங்கையில் மீண்டும் முடக்கமா? இல்லையா? - ஜனாதிபதி தலைமையில் இன்று முக்கிய தீர்மானம் - News View

Breaking

Thursday, August 5, 2021

இலங்கையில் மீண்டும் முடக்கமா? இல்லையா? - ஜனாதிபதி தலைமையில் இன்று முக்கிய தீர்மானம்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொடர்பான தற்போதைய முன்னேற்றங்கள் குறித்து விவாதிக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று (வெள்ளிக்கிழமை) முக்கிய கூட்டமொன்று இடம்பெறவுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா ஆங்கில ஊடகமொன்றுக்கு உறுதிப்படுத்தியுள்ளார்.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதுடன், தினசரி இறப்புகள் உச்சத்தை எட்டியுள்ளதால், இன்றைய சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

அத்தோடு, வைரஸ் வேகமாகப் பரவுவதைக் கட்டுப்படுத்த நாடு தழுவிய முடக்கத்தை அமுல்படுத்துமாறு தொடர்ச்சியாக கோரப்பட்டு வரும் நிலையில், இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.

எவ்வாறிருப்பினும் நாடு தழுவிய முடக்கத்தை அமுல்படுத்துவது குறித்து இதுவரையில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லையென இராணுவத்தளபதி குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயங்கள் தொடர்பாகவும் இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் பொருளாதாரத்தை மேலும் பாதிக்கும் என்பதால், முடக்கத்தை அமுல்படுத்தாமல் இருக்க அரசாங்கம் ஆர்வம் காட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் மாகாணங்களுக்கு இடையேயான பயணத் தடையை அரசாங்கம் தொடரும் என்றும் வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த மேலும் சில நடைமுறைகள் அமுல்படுத்தப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிது.

No comments:

Post a Comment