வாழைச்சேனையில் பையிலிருந்த பெண்ணின் கொலைக்கான காரணம் இதுதான் - News View

About Us

About Us

Breaking

Friday, August 6, 2021

வாழைச்சேனையில் பையிலிருந்த பெண்ணின் கொலைக்கான காரணம் இதுதான்

எஸ்.எம்.எம்.முர்ஷித்

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வாழைச்சேனை பொதுச்சந்தைப் பகுதியிலுள்ள வியாபார நிலையமொன்றிலிருந்து நேற்று வியாழக்கிழமை இரவு பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.

வாழைச்சேனை பிரதான வீதியிலுள்ள வர்த்தக நிலையத்தில் உர பையில் கட்டப்பட்ட பொதியை நண்பர் ஒருவர் கொண்டு வந்து வைத்து விட்டு பத்து நிமிடத்தில் எடுத்துக் கொள்வதாக சொல்லி விட்டுச் சென்றவர் திரும்ப வராத காரணத்தினால் வர்த்தக நிலைய உரிமையாளர் சந்தேக நபருக்கு தொலைபேசி அழைப்பை விடுத்த போது, அதை வைத்துக் கொள்ளுங்கள் நான் வருகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

குறித்த பொதியில் சந்தேகம் கொண்ட வர்த்தக நிலைய உரிமையாளர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய சென்ற வேளையில் குறித்த பெண்ணின் குடும்ப உறவினர்களும், குறித்த உரப் பையினை கடையில் வைத்தவரும் இருந்துள்ளனர். 

வர்த்தக நிலைய உரிமையாளர் பொலிஸில் செய்ய முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேக நபரும், வர்த்தக நிலைய உரிமையாளரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்படுவதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.

கொலை செய்யப்பட்ட குடும்பப் பெண் வாழைச்சேனை அல்லாப்பிச்சை வீதியைச் சேர்ந்த முஹம்மட் கனீபா சித்தி லைலா என்ற 55 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணிடம் கொலையாளி நகையினைப் பெற்று அடகு வைத்ததாகவும், அதில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்ட நிலையில், நகையை மீட்டுத்தருவதாக கொலையாளி கூறி குறித்த பெண்ணை வியாழக்கிழமை காலை 11 மணியளவில் அழைத்துச் சென்றுள்ளார். சென்றவர் மாலையாகியும் வீடு திரும்பாத நிலையில் குடும்பத்தினர் பொலிஸ் நிலையம் சென்றுள்ளனர்.

குறித்த பெண்ணை ஓட்டமாவடி எம்.பி.சீ.எஸ் வீதிலுள்ள கொலையாளியின் வளர்ப்பு மீன் கடைக்கு அழைத்துச் சென்று அங்கு வைத்து கொலை செய்யப்பட்ட நிலையில், உரப்பையில் போட்டு முச்சக்கர வண்டியில் ஏற்றிச் சென்று சடலத்தினை தடையல் இல்லாமல் செய்யும் நோக்கிலும், சந்தேகம் ஏற்படாத வண்ணமும் வாழைச்சேனையிலுள்ள நண்பரொருவரின் வளர்ப்பு மீன் கடையில் பெண்ணின் சடலத்தினை வைத்து இரவு வேளையில் எடுத்துச் செல்லும் வகையில் வைத்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

வாழைச்சேனை மாவட்ட / நீதவான் நீதிமன்ற நீதிபதி எச்.எம்.முஹமட் பஸீல் சம்பவ இடத்திற்கு வருகை தந்து கொலை செய்யப்பட்ட வியாபார நிலையம் மற்றும் சடலமிருந்த வியாபார நிலையம் என்பவற்றைப் பார்வையிட்டதுடன், குறித்த பெண்ணின் சடலத்தினை வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்குமாறு கட்டளை பிறப்பித்துள்ளார்.

மேலும், குறித்த இடத்திற்கு மட்டக்களப்பு மாவட்ட குற்ற தடவியல் பிரிவினர், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி வைத்தியர் சானக வென்கம, வாழைச்சேனை உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் ஜி.ஜெயசுந்தர, வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன ஆகியோர் வருகை தந்திருந்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட குற்ற தடவியல் பொலிஸார் மற்றும் வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment