ஆப்கானிஸ்தானிலிருந்து படைகளை திரும்பப் பெறத் தொடங்கியது துருக்கி - News View

Breaking

Friday, August 27, 2021

ஆப்கானிஸ்தானிலிருந்து படைகளை திரும்பப் பெறத் தொடங்கியது துருக்கி

ஆப்கானிஸ்தானில் உள்ள தமது துருப்புகளை திரும்பப் பெறத் தொடங்கியிருப்பதாக துருக்கி தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் நிலைநிறுத்தப்பட்டுள்ள நேட்டோ கூட்டுப்படையில் துருக்கியின் ராணுவ வீரர்கள் 500 க்கும் அதிகமானோர் உள்ளனர்.

அந்த நாட்டின் பஞ்ஷிர் பகுதி நீங்கலாக மற்ற அனைத்து பகுதிகளின் முழு கட்டுப்பாடும் தற்போது தலிபான் வசம் உள்ளது. தலிபானுடன் ஏற்கெனவே அமெரிக்கா செய்து கொண்ட உடன்பாட்டின்படி அந்த நாட்டில் இருந்து வெளிநாட்டுப் படையினர் வெளியேற ஆகஸ்ட் 31ஆம் திகதி வரை கெடு உள்ளது.

இதையொட்டி அங்கிருந்து வெளியேறுவதற்கான நடவடிக்கைகளை வெளிநாட்டுப் படைகள் மேற்கொண்டுள்ளன. இந்த நிலையில், தலிபான் கட்டுப்பாட்டுப் பிராந்தியத்தில் இருந்து ஆகஸ்ட் 31 க்குப் பிறகும் துருக்கி படையினர் தங்கியிருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், ஏஎஃப்பி செய்தி முகமையிடம் பேசிய துருக்கி ஜனாதிபதி ரிசெப் தயீப் எர்துவான், ஆப்கானிஸ்தானில் ஸ்திரத்தன்மை அவசியம் என்றும் அந்த இலக்கை எட்டுவதற்கு அந்த நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளுடனும் துருக்கி நெருக்கமாக பேசி வருவதாகவும் தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தானில் நேட்டோவின் அங்கமாக உள்ள துருக்கிய துருப்புகள் திரும்பப் பெறப்படும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் ரிசெப் தயீப் எர்துவான் கூறினார்.

No comments:

Post a Comment