வனிந்து ஹசரங்க, துஷ்மன்த சமீர ஆகியோருக்கு ஐ.பி.எல்.லில் விளையாட இலங்கை கிரிக்கெட் அனுமதி - News View

About Us

About Us

Breaking

Friday, August 27, 2021

வனிந்து ஹசரங்க, துஷ்மன்த சமீர ஆகியோருக்கு ஐ.பி.எல்.லில் விளையாட இலங்கை கிரிக்கெட் அனுமதி

(நெவில் அன்தனி)

ஐக்கிய அரபு இராச்சியத்தில் தொடரவுள்ள எஞ்சிய ஐ.பி.எல். இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்கு இலங்கை வீரர்களான வனிந்து ஹசரங்க, துஷ்மன்த சமீர ஆகியோருக்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் (எஸ்எல்சி)அனுமதி வழங்கியுள்ளது.

இவர்கள் இருவரும் விராத் கோஹ்லி தலைமையிலான றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியுடன் ஒப்பந்தம் செய்து கொண்டதாக அண்மையில் தகவல்கள் வெளியாகிருந்தன.

எனினும், ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்கு வனிந்து ஹசரங்கவும் துஷ்மன்த சமீரவும் ஓரிரு தினங்களுக்கு முன்னரே எழுத்து மூல அனுமதி கோரியதாகவும் அதற்கான ஆட்சேபனையற்ற சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாகவும் (No objection certificate) ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் செயலாளர் மொஹான் டி சில்வா இன்று காலை தெரிவித்தார்.

தென் ஆபிரிக்காவுக்கு எதிரான இருவகை கிரிக்கெட் தொடர்கள் நிறைவு பெற்ற பின்னர் சுகாதார நெறிமுறைகளைப் பின்பற்றி வனிந்த ஹசரங்கவும், துஷ்மன்த சமீரவும் ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதற்காக ஐக்கிய அரபு இராச்சியம் செல்ல முடியும் என அவர் குறிப்பிட்டார்.

இந்தியாவில் நடைபெற்று வந்த ஐபிஎல் போட்டிகள் கடந்த மே மாதம் கொரோனா தொற்று நோய் தாக்கம் காரணமாக இடைநிறுத்தப்பட்டது.

இந்நிலையில் எஞ்சிய ஐபிஎல் போட்டிகளை ஐக்கிய அரபு இராச்சியத்தில் செப்டெம்பர் 19ஆம் திகதியிலிருந்து ஒக்டோபர் 14 ஆம் திகதி வரை நடத்துவதற்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை தீர்மானித்திருந்தது.

எவ்வாறாயினும் ஐசிசி இருபதுக்கு 20 உலகக் கிண்ண முதல் சுற்றில் பங்குபற்றவுள்ள இலங்கை அணியினருடன் ஐக்கிய அரபு இராச்சியத்தில் வனிந்து ஹசரங்கவும், துஷ்மன்த சமீரவும் ஒக்டோபர் 10ஆம் திகதி இணைந்து கொள்ள வேண்டும் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதற்கு அமைய ஐ.பி.எல். இறுதிச் சுற்றில் வனிந்து ஹசரங்கவும், துஷ்மன்த சமீரவும் விளையாட மாட்டார்கள். ஐ.சி.சி. இருபது 20 உலகக் கிண்ண முதல் சுற்று போட்டிகள் அக்டோபர் 17ஆம் திகதி ஆரம்பமாகின்றது.

No comments:

Post a Comment