திட்டமிட்ட சித்திரவதைகளை முன்னெடுத்து வரும் இலங்கை பொலிஸாருக்கான பயிற்சிகளை உடனடியாக நிறுத்துங்கள் : பிரித்தானியாவை கோரியுள்ள யஸ்மின் சூக்கா - News View

About Us

About Us

Breaking

Sunday, August 15, 2021

திட்டமிட்ட சித்திரவதைகளை முன்னெடுத்து வரும் இலங்கை பொலிஸாருக்கான பயிற்சிகளை உடனடியாக நிறுத்துங்கள் : பிரித்தானியாவை கோரியுள்ள யஸ்மின் சூக்கா

(ஆர்.ராம்)

திட்டமிட்ட சித்திரவதைகளை முன்னெடுத்து வரும் இலங்கை பொலிஸாருக்கான பயிற்சிகளை வழங்குவதை பிரித்தானிய அரசாங்கமும் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா கோரியுள்ளார்.

ஸ்கொட்லாந்து இலங்கை பொலிஸாருக்கு வழங்கும் பயிற்சிகளை நிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக விடுத்துள்ள அறிவிப்பிற்கு வரவேற்பு தெரிவித்தும், பிரித்தானிய அரசாங்கத்திடம் அதையொத்த தீர்மானத்தினை முன்னெடுக்குமாறு கோரிக்கை விடுக்கும் வகையிலும் வெளியிட்டுள்ள ஊடக அறிவிப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 2016ஆம் ஆண்டு முதல் இலங்கையின் பொலிஸ் பிரிவுகளுக்கு பயிற்சிகளை வழங்குவதை நிறுத்துமாறு சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றது.

அத்துடன், இலங்கையின் பொலிஸ் பிரிவுகள் பல்வேறு சமயங்களில் நிகழ்த்திய சித்திரவதைகள் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டு அறிக்கைகளையும் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கானசெயற்திட்டம் தயாரித்துள்ளது.

அத்துடன், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிலும் இலங்கை பொலிஸ் பிரிவுகளின் சித்திரவதைகள் மற்றும் மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பிலான விடயங்கள் பற்றிய ஆதாரங்களுடன் சமர்ப்பணங்களும் செய்யப்பட்டுள்ளன.

இலங்கையின் பயங்கரவாத தடுப்பு பிரிவுக்கு பிரித்தானியா பயிற்சிகளை வழங்குவதை அடிப்படையாக வைத்து தம்மீதான குற்றங்களை இலங்கை பொலிஸ் பிரிவுகள் வெள்ளையடிப்புச் செய்வதற்கு முயற்சிக்கின்றன. ஐ.நா.வில் அவ்விதமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

மேலும், பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணைகளின் பெயரில் அழைத்துச் செல்பவர்களை சித்திரவதைக்குட்படுத்தியமை தொடர்பிலான ஆதராங்களை சேகரித்து வைத்துள்ளது.

அதில் குற்றவாளிகளின் பெயர்களும் உள்ளடக்கமாக உள்ளன. பொலிஸாரின் மற்றொரு பிரிவாக இருக்கும் விசேட அதிரடிப்படையானது போரின் போதும், அதற்குப் பின்னரும் தமிழர்களை கடத்துதல், விசாரணைக்கு அழைத்துச் செல்லுதல், தடுத்து வைத்தல், அக்காலப்பகுதியில் சித்திரவதைக்கு உட்படுத்தல் போன்ற நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. விசேட அதிரடிப்படையின் அவ்விதமான செயற்பாடுகளுக்குரிய சாட்சியங்களும் பதிவாகியுள்ளன.

ஆகவே, இவ்விதமான குற்றங்களில் ஈடுபட்டுள்ளவர்கள் மற்றும் இலங்கையின் பொலிஸ் பிரிவுகள் பொறுப்புக்கூறும் வரையில் அவர்களுக்கான பயிற்சிகளை வழங்குவதை பிரித்தானியா நிறுத்தி வைக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றோம் என்றுள்ளது.

No comments:

Post a Comment