பதவி விலகினார் மலேசிய பிரதமர் - காபந்து அரசாக தொடருமாறு உத்தரவிட்டார் மன்னர் - News View

About Us

About Us

Breaking

Monday, August 16, 2021

பதவி விலகினார் மலேசிய பிரதமர் - காபந்து அரசாக தொடருமாறு உத்தரவிட்டார் மன்னர்

மலேசிய பிரதமர் பதவியில் இருந்து மொஹிதின் யாசின் இன்று விலகி உள்ளார்.

அவரது ராஜினாமாவை மலேசிய மாமன்னர் ஏற்றுக் கொண்டதாக ஊடகத் தகவல் தெரிவிக்கிறது.

மலேசியாவில் மொஹிதின் யாசின் தலைமையிலான பெரிக்கத்தான் நேசனல் அமைச்சரவை இன்று பதவி விலகிய தகவலை அவரது அமைச்சரவையில் இடம்பெற்ற கைரி ஜமாலுதின் சற்று முன்னர் தெரிவித்தார்.

கடும் அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில் பிரதமர் மொஹிதின் யாசின் இன்று பதவி விலகுவார் என கடந்த இரு தினங்களாக தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தன.

இன்று திங்கட்கிழமை மலேசிய மாமன்னரைச் சந்தித்து அவர் தனது பதவி விலகல் கடிதத்தை ஒப்படைப்பார் என பிரதமர் துறையின் சிறப்பு விவகாரங்களுக்கான அமைச்சர் நேற்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், இன்று காலை பிரதமர் மொஹிதின் யாசின் தலைமையில் ஆளும் பெரிக்கத்தான் அரசாங்கத்தின் கடைசி அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றதாக தோட்டத்தொழில் அமைச்சர் பதவி வகித்த கைருடின் அமான் ரசாலி தெரிவித்தார்.

அமைச்சரைக் கூட்டம் முடிந்த பின்னர் மாமன்னரைச் சந்தித்துள்ளார் பிரதமர் மொஹிதின் யாசின். அப்போது அவர் பதவி விலகுவது குறித்து மாமன்னரிடம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மலேசியாவில் புதிய அரசு அமையும் வரை காபந்து அரசாக தொடருமாறு பிரதமர் மொஹிதின் யாசினை மாமன்னர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது தொடர்பாக மாமன்னர் அரண்மனையின் ஃபேஸ்புக் அலுவல்பூர்வ பக்கத்தில் மலாய் மொழியில் மன்னரின் முடிவு விவரிக்கப்பட்டுள்ளது.

அதில் அடுத்த பிரதமரை தேர்வு செய்யும் வரை காபந்து அரசாக தொடருமாறு மன்னர் பிரதமருக்கு உத்தரவிட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment