"டெல்டா பிறழ்வு" நிலையினை வெற்றிகரமாக கடந்து வருவோம் எனும் நம்பிக்கை இருக்கிறது : அக்கரைப்பற்று முதல்வர் அகமட் ஸகி - News View

About Us

About Us

Breaking

Saturday, August 7, 2021

"டெல்டா பிறழ்வு" நிலையினை வெற்றிகரமாக கடந்து வருவோம் எனும் நம்பிக்கை இருக்கிறது : அக்கரைப்பற்று முதல்வர் அகமட் ஸகி

நூருல் ஹுதா உமர்

அம்பாறை மாவட்டத்தில் கொரோனாவின் திரிபடைந்த "டெல்டா பிறழ்வு" தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ள நிலையில் அண்மைய நாட்களில் நமது பிராந்தியத்திலும் கொரோனா தொற்றின் காரணமாக சில மரணங்கள் ஏற்பட்டுள்ளன. அதே வேளை, வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கையும் சடுதியாக அதிகரித்து காணப்படுகின்றன. பொதுமக்கள் மிகுந்த சுகாதார பாதுகாப்புடன் அவதானமாக செயற்படவேண்டும் என அக்கரைப்பற்று மாநகர முதல்வர் அதாஉல்லா அகமட் ஸகி தெரிவித்துள்ளார்.

பொதுமக்களின் சுய பாதுகாப்பினை வலியுறுத்தி முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது; நாட்டில் கொரோனாவின் கோரத்தாண்டவம் உச்சத்தை அடைந்து தொற்றாளர்களின் எண்ணிக்கையும், மரண விகிதமும் அதிகரித்துள்ளன. கடந்த சில நாட்களில் மாத்திரம் நாடு பூராகவும் 500 இற்கும் மேற்பட்ட கொரோனா மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக சுகாதார தரப்பினரின் ஊடக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

வினைத்திறனாய் செயற்படும் ஒரு பொறுப்புவாய்ந்த மாநகர சபை எனும் அடிப்படையில்- எமது பிராந்திய மக்களின் சுகாதார நலன் கருதி, எதிர்வரும் காலங்களில் கோவிட் 19 தொற்றினால் ஏற்படப்போகும் அபாயத்தை உணர்ந்து அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் ஒத்துழைப்போடு, சமூக அமைப்புகளின் அனுசரணையில் கொரோனா அவசர சிகிச்சை மையத்தை ஏலவே நிறுவினோம். சமகாலத்தில் அச்சிகிச்சை மையம் ஊடாக கொரோனா தொற்றிற்கு இலக்காகும் நமது பிராந்திய மக்கள் நன்மையடைந்து வருவது ஒரு ஆறுதலான செய்தியாயினும், விசேட மருத்துவ பராமரிப்பு மற்றும் செயற்கை சுவாசம்(ஒட்சிசன்) தேவைப்படும் கொரோனா தொற்றாளர்களின் அதிகரிப்பு எமக்குள் சிறிய அச்சத்தை ஏற்படுத்துகிறது. இருப்பினும், இந்த நிலையினையும் வெற்றிகரமாக கடந்து வருவோம் எனும் நம்பிக்கை இருக்கிறது.

அரசின் தேசிய மட்ட கோவிட் தடுப்பு செயலணியினர் இருபத்து நான்கு மணித்தியாலமும் விழிப்புடன் செயற்பட்டு வருகின்றனர். அது போல கொரோனா தடுப்பு முன்னரங்க செயற்பாட்டாளர்கள் தமது உயிரை துச்சமென நினைத்து பணியாற்றுகின்றனர். எதிர்பார்த்ததை விடவும் கூடுதலான தொற்றாளர்கள் இனம் காணப்படுவதால் கட்டில்கள், ஒட்சிசன் போதாமையினால் நாட்டில் ஒரு சில வைத்தியசாலைகள் அவசர நிலையை பிரகடனம் செய்திருக்கின்றன. மருத்துவ பணியாளர்கள் இந்த நிலையை சமாளிப்பதற்கு தியாகத்துடன் போராடி வருகின்றனர். அவர்களின் அர்ப்பணிப்பு மிக்க சேவையை நாம் அனைவரும் பாராட்டும் அதே வேளை, பொதுமக்களாகிய நாம் இந்நோய் தொற்றினை நம் நாட்டில் இருந்து துடைத்தெறிய முன்னரங்க பணியாளர்களுக்கு பூரண ஒத்துழைப்பினை அவசியம் வழங்குதல் வேண்டும்.

எல்லைமீறிப்போகும் இத்தொற்றில் இருந்து பொதுமக்களாகிய நாம் எவ்வாறு மீள்வது..? தற்போதைய நிலைவரங்களின் படி நாடு முடக்கப்பட்டாலும், முடக்கப்படாமல் இருந்தாலும் ஒவ்வொரு தனி நபரும், ஒவ்வொரு குடும்பமும், ஒவ்வொரு பிரதேசமும் தமது சுய சுகாதார பாதுகாப்பில் கூடுதல் கரிசனை செலுத்தி செயற்படுவதே புத்திசாலித்தனமாகும். தற்போதைய நிலையில் நமது நாடு மிகபெரிய மருத்துவ மற்றும் பொருளாதார அனர்த்த நெருக்கடியில் சிக்கித் தவித்து கொண்டிருக்கிறது. அதனை பொறுப்புவாய்ந்த ஒவ்வொரு பிரஜையும் அறிந்திருத்தல் வேண்டும். அபாய எச்சரிக்கை நம் வாசல்களுக்கு நெருக்கமாக கேட்க தொடங்கி விட்டது. எமது செவிகளை எட்டும் மரண ஓலங்களும் இதயத்தை நெருடிக் கொண்டிருக்கின்றன.

நாம் வாழ்வில் ஒரு போதும் சந்தித்திராத கடினமான மருத்துவ அனர்த்தமாய் மாறியிருக்கும் இந்நாட்களை அனைவரும் மிக கவனமாய் கையாள வேண்டும் என்று அதாஉல்லா அகமட் ஸகி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment