சிஐடியினர் அழைத்தால் ஹரின் எம்.பி வைத்தியசாலையில் படுத்துக் கொள்கிறார், ஆனால், பாராளுமன்றத்தில் நேரடி விவாதத்திற்கு அழைக்கிறார் - சரத் வீரசேகர - News View

About Us

About Us

Breaking

Friday, August 6, 2021

சிஐடியினர் அழைத்தால் ஹரின் எம்.பி வைத்தியசாலையில் படுத்துக் கொள்கிறார், ஆனால், பாராளுமன்றத்தில் நேரடி விவாதத்திற்கு அழைக்கிறார் - சரத் வீரசேகர

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்த தமக்கு தெரிந்த தகவல்களை வழங்குவதற்காக சிஐடியினர் அழைத்தால் ஹரின் பெர்ணான்டோ எம்.பி வைத்தியசாலையில் சென்று படுத்துக் கொள்கிறார். ஆனால், பாராளுமன்றத்தில் நேரடி விவாதத்திற்கு அழைக்கிறார். அவர் சிஐடியினருடன்தான் நேரடி விவாதத்தை நடத்த வேண்டுமென பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற குடிவரவு குடியகல்வு சட்டத்தின் ஒழுங்கு விதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ சிஐடிக்கு விசாரணைகளுக்காக அழைக்கப்பட்டால் நவலோக்க வைத்தியசாலையில் சென்று படுத்துக் கொள்கிறார். அவ்வாறானவர்கள் விடும் சவால்களுக்கு முகங்கொடுக்க நாம் தயாரில்லை.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன. கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்கள் மீண்டும் கைது செய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த விசாரணைகளில் நாம் தொடர்புபடவில்லை. அதேபோன்று தாக்குதலுக்கும் எமக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. குற்றப் புலனாய்வுத் துறையினர் இந்த இரண்டிலும் தொடர்புடையவர்களிடம்தான் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

ஹரின் பெர்ணான்டோ இந்த விசாரணைகளுடன் தொடர்புடையவராவார். அதனால் அவர் விவாதத்திற்கு செல்ல வேண்டுமென்றால் சிஐடி அதிகாரிகளுடன்தான் செல்ல வேண்டும். எம்முடன் அல்ல. விசாரணைகள் என்பது அரசியல் கடமையல்ல. இது பொலிஸாரின் கடமையாகும் என்பதை அவர் புரிந்துகொள்ள வேண்டும் என்றார்.

ஷம்ஸ் பாஹிம், சுப்பிரமணியம் நிஷாந்தன்

No comments:

Post a Comment