போராட்டங்களில் ஈடுபடுவதை குறைந்தது மூன்று வார காலத்திற்காவது தவிர்த்து பொறுப்புடன் செயற்பட வேண்டும் - நாமல் ராஜபக்ஷ - News View

About Us

About Us

Breaking

Friday, August 6, 2021

போராட்டங்களில் ஈடுபடுவதை குறைந்தது மூன்று வார காலத்திற்காவது தவிர்த்து பொறுப்புடன் செயற்பட வேண்டும் - நாமல் ராஜபக்ஷ

இராஜதுரை ஹஷான்

போராட்டங்களின் காரணமாகவே கொவிட்-19 வைரஸ் பரவல் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. இதனால் நாட்டு மக்களுக்கு பெருமளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆகவே அனைத்து தரப்பினரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும். தொழிற்சங்கத்தினர் போராட்டங்களில் ஈடுபடுவதை குறைந்தது 3 வார காலத்திற்காவது தவிர்த்துக் கொள்ள வேண்டும் என விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

கொவிட் -19 வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளமை தொடர்பில் ஊடகவியலாளர் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், போராட்டங்கள் ஆரம்பமானதுடன் கொவிட்-19 வைரஸ் பரவலும் தீவிரமடைந்துள்ளது.கொவிட்-19 முதலாம் கட்ட தடுப்பூசிகளை பெற்றுக் கொண்ட ஒரு தரப்பினர் தங்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களை பின்பற்றாமல் போராட்டங்களில் ஈடுப்பட்டார்கள். இதனால் ஒட்டு மொத்த மக்களும் இன்று நெருக்கடிக்குள்ளாக்கியுள்ளார்கள்.

போராட்டங்கள் தீவிரமடைந்ததனால் கொவிட்-19 வைரஸ் பரவல் தற்போது தீவிரமடைந்துள்ளது. தொழிற்சங்கத்தினரது கோரிக்கைகள் நியாயமானதா அல்லது நியாயமற்றதா என்பது தொடர்பில் ஆராயும் தருணம் இதுவல்ல . இதனால் நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு தொடர்பில் ஆராய வேண்டும்.

பாடசாலைகளை மீள திறத்தல் தொடர்பிலான பல தீர்மானங்களை மீளாய்வு செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. நாட்டை மீண்டும் மூடுங்கள் என எதிர்க்கட்சியினர் குறிப்பிடுகிறார்கள். நாட்டை மூடுவதால் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது.

அரசியல் நோக்கங்களை கருத்திற் கொண்டு நாட்டு மக்களை நெருக்கடிக்குள்ளாக்கும் செயற்பாடுகளை தவிர்த்துக் கொள்ள வேண்டும். ஆகவே அனைத்து தரப்பினரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.

மூன்று வார காலத்திற்காவது போராட்டங்களில் ஈடுப்படுவதை தொழிற்சங்கத்தினர் தவிர்த்துக் கொள்ள வேண்டும். பேச்சுவார்த்தை ஊடாக மாத்திரமே பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக் கொள்ள முடியும் என்றார்.

No comments:

Post a Comment