மூன்று மாதங்களுக்குள் தண்டனை வழங்குவதாகக் கூறிய அரசாங்கம் ஏன் அதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்கவில்லை? அதிலுள்ள பிரச்சினை என்ன? - கபிர் ஹாசிம் - News View

Breaking

Thursday, August 26, 2021

மூன்று மாதங்களுக்குள் தண்டனை வழங்குவதாகக் கூறிய அரசாங்கம் ஏன் அதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்கவில்லை? அதிலுள்ள பிரச்சினை என்ன? - கபிர் ஹாசிம்

(எம்.மனோசித்ரா)

சுபீட்சத்தின் நோக்கு கொள்கை திட்டத்தின் அடிப்படையில் ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டு மூன்று மாதங்களுக்குள் உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களுடன் தொடர்புடைய சூத்திரதாரிகளை இனங்கண்டு அவர்களுக்கு தண்டனை வழங்குவதாகக் கூறிய அரசாங்கம் ஏன் அதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்கவில்லை? அதிலுள்ள பிரச்சினை என்ன? என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கபிர் ஹாசிம் கேள்வியெழுப்பினார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இவ்வாறு கேள்வியெழுப்பினார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பில் பாராளுமன்றத்திற்குள்ளும் வெளியிலும் நாம் பல போராட்டங்களை முன்னெடுத்துள்ளோம்.

குறிப்பாக பேராயர் உள்ளிட்ட தரப்பினர் இது தொடர்பில் நியாயமான விசாரணைகளை முன்னெடுத்து இதன் பின்னணியில் உள்ள பிரதானிகளை கண்டறியுமாறு தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தனர்.

சுமார் ஒன்றரை வருடங்களின் பின்னரே பொலிஸ்மா அதிபரும் விசேட அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார். அதுவும் கடந்த ஒரு சில தினங்களுக்கு முன்னர் கறுப்பு கொடி போராட்டத்தின் மூலம் எதிர்ப்புக்கள் வெளியிடப்பட்டதன் பின்னரேயாகும். இது வெறும் விளம்பரமாக இருக்கலாம்.

இதனைவிட நேர்மையாக இதனுடன் தொடர்புடைய சூத்திரதாரிகளை இனங்காண்பதற்கு சுபீட்சத்தின் நோக்கு கொள்கை திட்டத்தின் அடிப்படையில் ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டு மூன்று மாதங்களுக்குள் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவதாகக் கூறிய அரசாங்கம் அதற்கான செயற்பாடுகளை ஏன் முன்னெடுக்கவில்லை? அதிலுள்ள பிரச்சினை என்ன? என்று கேள்வியெழுப்பினார்.

No comments:

Post a Comment