கொவிட் தொற்றுப் பரவலிலிருந்து சிறுவர்கள், வயோதிபர்களை பாதுகாக்க நீர்கொழும்பு நகரில் சிறப்புத் திட்டம் : அமைச்சர் நிமல் லான்சா தலைமையில் ஆராய்வு - News View

About Us

About Us

Breaking

Thursday, August 26, 2021

கொவிட் தொற்றுப் பரவலிலிருந்து சிறுவர்கள், வயோதிபர்களை பாதுகாக்க நீர்கொழும்பு நகரில் சிறப்புத் திட்டம் : அமைச்சர் நிமல் லான்சா தலைமையில் ஆராய்வு

நாட்டில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றிலிருந்து 2 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் கொவிட்19 நோயால் பாதிக்கப்பட்ட 65 வயதுக்கு மேற்பட்டவர்களைப் பாதுகாக்க ஒரு சிறப்புத் திட்டத்தை உருவாக்க இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா தலைமையில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, 65 வயதிற்கு மேற்பட்டவர்கள்பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுவதால், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு உடனடி சிகிச்சைக்காக அல்லது சிகிச்சை முறைகளில் குறைபாடுகளை தவிர்க்க இடைநிலை தனிமைப்படுத்தல் மையங்கள் அல்லது மருத்துவமனைகளுக்கு அனுப்புவதற்கான முடிவுகளை விரைவுப்படுத்தும் செயல்முறை குறித்து ஆலோசிக்கப்பட்டு தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

நீர்கொழும்பு சுகாதார பிரிவின் 24 மணி நேரமும் செயல்படும் கொவிட்19 தகவல் மையத்தை உருவாக்கி 65 வயதுக்கு மேற்பட்டவர்களை அடையாளம் கண்டு, உடனடியாக அவர்களை வழிநடத்தவும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் திட்டத்தை விரைவுபடுத்துவதுடன், வீட்டிலேயே தடுப்பூசிகளை வழங்கும் திட்டத்தை வலுப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டது. நீர்கொழும்பு மாநகர சபையின் ஊடாக தேவையான போக்குவரத்து வசதிகளை வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

நீர்கொழும்பு சுகாதார பிரிவில் கொவிட்19 வைரஸ் தொற்றுக்குள்ளாகி மரணிப்பவர்களின் சதவீதத்தை குறைக்கவும் தொற்றாளர்களுக்கு விரைவாக சிகிச்சைகளை வழங்கி தொற்றுப்பரவலை கட்டுப்படுத்தவும் விசேட வேலைத்திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

நீர்கொழும்பு சுகாதாரப்பிரிவில் கொவிட்19 தொற்றை கட்டுப்படுத்துவதற்காக எதிர்காலத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா தலைமையில் நேற்று விசேட கலந்துரையாடலொன்று நீர்கொழும்பு நகர சபையில் நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் சுகாதாரப்பிரிவினரும் பாதுகாப்பு அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

நீர்கொழும்பு சுகாதார பிரிவில் கொவிட்19 உயிரிழப்புகளை குறைக்கவும், கொவிட்19 தொற்றுநோய் பரவுவதைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை வலுப்படுத்தவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது. 

நீர்கொழும்பு மேயர் தயான் லன்சா, நீர்கொழும்பு மருத்துவமனை இயக்குனர் நிர்மலா லோகநாதன், கம்பஹா மாவட்ட கொவிட்19 நோயாளர்களின் போக்குவரத்து ஒருங்கிணைப்பாளர் சிந்தன லியனகே உட்பட துறைசார் அதிகாரிகள் பலரும் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

No comments:

Post a Comment