கொவிட் தொற்று அல்லாத வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்களும் உயிரிழக்கும் வீதம் அதிகரிக்கக் கூடும் : வைத்தியசாலைக்கு வந்து சிகிச்சைகளைப் பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தல் - News View

About Us

About Us

Breaking

Monday, August 9, 2021

கொவிட் தொற்று அல்லாத வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்களும் உயிரிழக்கும் வீதம் அதிகரிக்கக் கூடும் : வைத்தியசாலைக்கு வந்து சிகிச்சைகளைப் பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தல்

(எம்.மனோசித்ரா)

நாட்டில் கொவிட் தொற்று பரவலின் தீவிர நிலைமை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாளொன்றில் மூவாயிரத்தை அண்மிக்குமளவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை 2956 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டமை நாட்டின் தற்போதைய நிலைமையை தெளிவாகக் காண்பிக்கிறது. இவ்வாறான நிலையில் கொவிட் தொற்றால் மாத்திரமின்றி, ஏனைய நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களும் எதிர்வரும் வாரங்களில் உயிரிழக்கும் வீதம் அதிகரிக்கக் கூடும் என்று சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் ஏற்பட்ட சடுதியான அதிகரிப்பினால் வைத்தியசாலைகளில் அளவுக்கதிக நோயாளர்களால் நெறிசல் ஏற்பட்டது. இதனால் நீரிழிவு உள்ளிட்ட நாட்பட்ட நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வைத்தியசாலைகளுக்கு சமூகமளிப்பதை தவிர்ப்பதாகவும், இதன் காரணமாக எதிர்வரும் வாரங்களில் கொவிட் அல்லாத வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்களும் உயிரிழக்கும் வீதம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வைத்தியர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

எனவே எவ்வித அச்சமும் இன்றி வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் வைத்தியசாலைக்கு வருகை தந்து சிகிச்சைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று வைத்தியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இலங்கையில் இதுவரையில் பதிவாகியுள்ள மரணங்களிகளில் 4502 மரணங்கள் மூன்றாம் அலையில் பதிவானவையாகும். எனினும் இரண்டாம் அலையில் 596 மரணங்களும், முதலாம் அலையில் 13 மரணங்கள் மாத்திரமே பதிவாகியிருந்தன.

இன்று இனங்காணப்பட்ட தொற்றாளர்கள்
இந்நிலையில் இன்று திங்கட்கிழமை மாலை 6 மணி வரை 1928 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதற்கமைய இதுவரையில் 331922 கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இவ்வாறு இனங்காணப்பட்ட தொற்றாளர்களில் 295518 தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதோடு, 31293 தொற்றாளர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

No comments:

Post a Comment