(இராஜதுரை ஹஷான்)
புகையிரத போக்கு வரத்து சேவையினை தொடர்ந்து முன்னெடுத்து செல்ல முடியாத நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. புகையிரத சேவையாளர்களில் பெரும்பாலானோர் கொவிட் வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளார்கள். இந்நிலை தொடர்ந்தால் புகையிரத கொவிட் கொத்தணி தோற்றம் பெறும். புகையிதர நிலையங்களின் சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்த புகையிரத திணைக்களம் உரிய நடவடிக்கைகளை இதுவரையில் முன்னெடுக்கவில்லை என புகையிரத நிலைய அதிபர் சங்கத்தின் செயலாளர் கசுன் சாமர தெரிவித்தார்.
இவ்விடயம் குறித்து அவர் மேலும் குறிப்பிட்டதாவது, கொவிட்-19 வைரஸ் தாக்கம் சடுதியாக அதிகரித்துள்ளன. புகையிரத கட்டுப்பாட்டு காரியாலய சேவையாளர்கள், புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் உள்ளிட்ட சேவையாளர்களில் 12 பேர் இதுவரையில் கொவிட்-19 வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளார்கள். பலர் சுய தனிமைப்படுத்தலில் உள்ளனர்.
களுத்துறை, இதுருவ, கொலன்னாவ ஆகிய புகையிரத நிலையங்களில் சேவையாற்றுபவர்களில் பெரும்பாலானோர் கொவிட்-19 வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளார்கள்.
புகையிரத போக்கு வரத்து சேவையினை சிறந்த முறையில் முன்னெடுத்து செல்வதற்கான பொருத்தமான திட்டத்தை புகையிரத திணைக்களம் இதுவரையில் அறிமுகப்படுத்தவில்லை.
சுகாதார பாதுகாப்பு கருவிகள் முழுமையாக வழங்கப்படவில்லை. இவ்வாறான பாதுகாப்பற்ற வகையில் புகையிரத சேவை தொடர்ந்தால் புகையிரத கொவிட் கொத்தணி உருவாகுவதற்கு வாய்ப்புள்ளது.
ஆகவே புகையிரத சேவையினை தொடர்ந்து பாதுகாப்பான முறையின் முன்னெடுத்து செல்ல வேண்டுமாயின் புகையிரத நிலையங்களில் காணப்படும் குறைப்பாடுகளுக்கு புகையிரத திணைக்களம் உரிய தீர்வை வழங்க வேண்டும். இல்லாவிடின் புகையிரத சேவை பாரிய நெருக்கடிகளை எதிர்க் கொள்ளும் என்றார்.
No comments:
Post a Comment