நாடளாவிய ரீதியில் 900 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு : அத்தியாவசிய தேவைக்கு பயணிப்போருக்கு பொலிஸ் அனுமதிப்பத்திரம் வழங்கப்படாது - பொலிஸ் பேச்சாளர் - News View

About Us

About Us

Breaking

Sunday, August 22, 2021

நாடளாவிய ரீதியில் 900 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு : அத்தியாவசிய தேவைக்கு பயணிப்போருக்கு பொலிஸ் அனுமதிப்பத்திரம் வழங்கப்படாது - பொலிஸ் பேச்சாளர்

எம்.மனோசித்ரா

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள  நிலையில் நாடளாவிய ரீதியில் சுமார் 900 பொலிஸ் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்புக்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன்போது ஏதேனுமொரு வகையில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் பற்றாக்குறை ஏற்பட்டால் முப்படையினரின் ஒத்துழைப்பும் பெற்றுக் கொள்ளப்படவுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

தற்போது நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ளது தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் என்பதால் அதாவது பொலிஸ் ஊரடங்கு சட்டம் இல்லை என்பதால் அத்தியாவசிய தேவைக்காக வெளியிடங்களுக்கு பயணிப்பவர்களுக்கு பொலிஸ் அனுமதிப்பத்திரம் வழங்கப்பட மாட்டாது. 

எனவே அத்தியாவசிய தேவையுடையோர் உரிய ஆவணங்களைக் காண்பித்து வெளியிடங்களுக்கு செல்ல முடியும் என்றும்  பொலிஸ் பேச்சாளர் நிஹால் தல்துவ சுட்டிக்காட்டினார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார். 

அவர் மேலும் குறிப்பிடுகையில், தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள இந்த காலப்பகுதியில் அத்தியாவசிய பொருள் விநியோகத்துடன் தொடர்புடையவர்கள், தொழிலுக்கு செல்வோர் மற்றும் மேற்குறிப்பிட்ட இரு விடயங்களும் இன்றி மருத்துவ தேவை அல்லது மரண வீடுகள் உள்ளிட்டவற்றுக்கு செல்வோருக்கு பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

இவ்வாறானவர்களுக்கு மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்கள் ஊடாக ஊரடங்கு அனுமதி பத்திரம் வழங்கப்படும். அலுவலகங்களுக்குச் செல்வோர் அலுவலக அடையாள அட்டையைக் காண்பித்து பயணிக்க முடியும். அல்லது அலுவலக பிரதானிகளால் வழங்கப்பட்ட கடிதத்தை தம்வசம் வைத்திருக்க வேண்டும்.

ஆவணங்கள் சந்தேகத்திற்கிடமானவை என்று கண்காணிப்புக்களில் ஈடுபடும் பொலிஸார் கருதும் பட்சத்தில் அலுவலகத்திலுள்ள ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர் ஒருவருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உறுதிப்படுத்தக் கூடிய வசதிகளையும் அலுவலக பிரதானிகள் உத்தியோகத்தர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். 

No comments:

Post a Comment