காணாமற்போன 53 வயது பெண் 7 நாட்களின் பின் நீர் வீழ்ச்சியில் சடலமாக மீட்பு : இதே நீர் வீழ்ச்சியில் காணாமற்போன 19 வயது சிறுமி தொடர்பில் எவ்வித தகவல்களும் இல்லை - News View

About Us

About Us

Breaking

Monday, August 2, 2021

காணாமற்போன 53 வயது பெண் 7 நாட்களின் பின் நீர் வீழ்ச்சியில் சடலமாக மீட்பு : இதே நீர் வீழ்ச்சியில் காணாமற்போன 19 வயது சிறுமி தொடர்பில் எவ்வித தகவல்களும் இல்லை

திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரதேசத்தில் அமைந்துள்ள டெவோன் நீர் வீழ்ச்சி பகுதியில் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

நேற்று (01) மாலை மீட்க்கப்பட்ட பெண்ணின் சடலம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் இன்று தெரிவித்தனர்.

இவ்வாறு சடலமாக மீட்க்கப்பட்ட பெண் பத்தனை நகரத்தை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயான வீ. மலர்விழி எனும் 53 வயது பெண் என உறவினர்கள் பொலிஸாருக்கு அடையாளம் காட்டியுள்ளனர்.

கடந்த ஜூலை 26 ஆம் திகதி வீட்டிலிருந்து காணாமற்போன இப்பெண் தொடர்பில் திம்புள்ள பத்தனை பொலிஸ் நிலையத்தில் உறவினர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.

இதனடிப்படையில் வீட்டிலிருந்து காணாமற்போன இப்பெண் நீலம் மற்றும் வெள்ளை நிற கோடுகள் இட்ட சட்டை ஒன்றை அணிந்திருந்ததாக பொலில் முறைப்பாட்டில் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

அதேநேரத்தில் முறைப்பாட்டுக்கு அமைவாக பொலிஸார் மேற்கொண்ட தேடுதல் முயற்சிகளின் அடிப்படையில் டெவோன் நீர் வீழ்ச்சி பகுதியில் குடை, பாதணிகள், மற்றும் கைப்பை ஒன்று உள்ளிட்ட பொருட்கள் நீர் வீழ்ச்சியின் உச்சிப்பகுதியில் இருந்ததை கண்டறிந்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட தேடுதலில் பெண்ணின் தகவல் ஏதும் கிடைத்திராத நிலையில், நேற்று (01) மாலை மலைப் பகுதியிலிருந்து சுமார் 200 அடி பள்ளத்தில் நீர் வீழ்ச்சியின் அடிவாரத்தில் நீரில் மிதந்த நிலையில் இப்பெண்ணின் சடலம் பொலிஸாரால் மீட்க்கப்பட்டுள்ளது.

இவரின் மரணம் தொடர்பில் பிரேத பரிசோதனைக்காக சடலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் இதே நீர் வீழ்ச்சியினை பார்வையிட கடந்த மாதம் (18) சென்ற 4 பேரில், லிந்துலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட லென்தோமஸ் தோட்டத்தைச் சேர்ந்த 19 வயதான மணி பவித்ரா கால் இடறி வீழ்ந்து காணாமற் போயிருந்தார். 

அவரைத் தேடும் பணியில் படையினர் ஈடுப்பட்ட போதிலும் இதுவரை அவர் தொடர்பில் எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

(ஹட்டன் சுழற்சி நிருபர் - கே. கிரிஷாந்தன்)

No comments:

Post a Comment