இலங்கையில் சிறுவர்களைத் தாக்கும் 'மிஸ்-சி' நோய் : 46 பேர் பாதிப்பு, மூவர் உயிரிழப்பு - பெற்றோருக்கு அறிவுரை கூறும் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, August 31, 2021

இலங்கையில் சிறுவர்களைத் தாக்கும் 'மிஸ்-சி' நோய் : 46 பேர் பாதிப்பு, மூவர் உயிரிழப்பு - பெற்றோருக்கு அறிவுரை கூறும் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம்

(எம்.மனோசித்ரா)

இலங்கையில் கொவிட் தொற்றுக்கு உள்ளான சிறுவர்களை தாக்கும் பல உறுப்பு அழற்சி நிலை 'மிஸ்-சி' (Multisystem Infalmmatory Syndrome in Children - MIS-C) என்ற நோய் பெரும்பாலான உடற்பாகங்களை அல்லது தொகுதிகளை பாதிக்கக் கூடியதாகும். எனினும் இதுவரையில் கொவிட் தொற்றுக்கு உள்ளான சிறுவர்களில் நூற்றுக்கு ஒரு வீதத்திற்கும் குறைவானோரே இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே 8 - 11 வயதுக்கு இடைப்பட்ட சிறுவர்களின் அன்றாட செயற்பாடுகளில் மாற்றங்கள் ஏற்படுமாயின் தாமதிக்காது வைத்தியர்களின் ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இதுவரையில் இந்த பல உறுப்பு அழற்சி நிலை நோயால் பாதிக்கப்பட்ட 46 சிறுவர்கள் கொழும்பு - சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் மூவர் உயிரிழந்துள்ளதாகவும் சீமாட்டி வைத்தியசாலையின் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் தெரிவித்தார்.

இந்நோய் தொடர்பில் அவர் மேலும் தெளிவுபடுத்துகையில், இந்த நோய் நிலைமையால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு காய்ச்சல், தோலில் அரிப்பு, கண் மற்றும் நாக்கு சிவத்தல், உதடுகள், கை மற்றும் கால்கள் வீங்குதல், வயிற்று வலி, வயிற்றோட்டம், வாந்தி உள்ளிட்ட அறிகுறிகள் தென்படும். அதிகளவில் வாந்தி ஏற்படக் கூடிய நிலையும் இருக்கிறது. இவற்றுடன் தலைவலி, உடற்சோர்வு மற்றும் உளநிலை பாதிப்பு என்பனவும் ஏற்படும்.

இவ்வாறான நோய் நிலைமை கொவிட் தொற்றுக்கு பின்னரே ஏற்படுவதாக பல நாடுகளிலும் அறியப்பட்டுள்ளது. எனவே சிறுவர்களை மிக அவதானமாக பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு பெற்றோருக்கு இருக்கிறது. இந்த நோய் நிலைமை ஏற்படும் போது தாமதிக்காமல் வைத்தியர்களின் ஆலோசனைகளைப் பெற வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment