26 வீரர்களைக் கொண்ட 19 வயதுக்குட்பட்ட இலங்கை கிரிக்கெட் குழாம் அறிவிப்பு - News View

Breaking

Thursday, August 26, 2021

26 வீரர்களைக் கொண்ட 19 வயதுக்குட்பட்ட இலங்கை கிரிக்கெட் குழாம் அறிவிப்பு

(எம்.எம்.சில்வெஸ்டர்)

எதிர்வரும் காலத்தில் நடைபெறவுள்ள 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ணம், 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ணம் மற்றும் பல்வேறு அணிகளுடனான கிரிக்கெட் தொடர்களை கருத்திற் கொண்டு 26 வீரர்களைக் கொண்ட 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் குழாத்தை இலங்கை கிரிக்கெட் பெயரிட்டுள்ளது.

இதில் கொழும்பு புனித சூசையப்பர் கல்லூரி, கொழும்பு புனித பேதுருவானவர் கல்லூரி, காலி தேவபதிராஜ கல்லூரி, கண்டி திரித்துவ கல்லூரி, கட்டுகஸ்தோட்டை புனித அந்தோனியார் கல்லூரி ஆகியற்றிலிருந்து தலா மூன்று பேரும், கல்கிஸ்ஸை பரி.தோமா கல்லூரி, கொழும்பு நாலாந்தா கல்லூரி ஆகியவற்றிலிருந்து தலா இருவரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களைத் தவிர, கொழும்பு றோயல் கல்லூரி, கொழும்பு டி.எஸ். சேனாநாயக்க கல்லூரி, கொழும்பு தேர்ஸ்டன் கல்லூரி, குருணாகல் மலியதேவ கல்லூரி, மாத்தறை பரி. தோமா கல்லூரி மற்றும் அம்பலாங்கொடை மாதம்பாகம வித்தியாலயம் ஆகியவற்றிலிருந்து தலா ஒருவர் என இந்த குழாத்தில் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

நாடு தழுவிய ரீதியாக 75 பேரைத் தெரிவு செய்து, அவ்களை 5 அணிகளாக பிரித்து முன்னெடுக்கப்பட்ட கிரிக்கெட் போட்டிகளின்போது அவரவரின் திறமைகள் அடிப்படையில் இந்த 26 வீரர்கள் தெரிவு செய்யப்பட்டதாக ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இவர்களில் 13 பேர் மேல் மாகாணங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்டுள்ளனர். ஏனைய மாகாணங்களிலிருந்து ஒருவர் கூட தெரிவு செய்யப்படவில்லை.

இந்நிலையில், தற்போது தெரிவு செய்யப்பட்டுள்ள 26 பேர் கொண்ட 19 வயதுக்குட்பட்ட இலங்கை கிரிக்கெட் குழாம் குறித்து பல்வேறுபட்ட கருத்துக்கள் கிரிக்கெட் விமர்சகர்களால் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

நாட்டில் 9 மாகாணங்கள் காணப்படுகின்ற போதிலும், 19 வயதுக்குட்பட்ட இந்த இலங்கை குழாத்தில் இடம்பெற்ற 26 பேருமே வெறும் 4 மாகாணங்களிலிருந்தே தெரிவு செய்யப்பட்டுள்ளமை எவ்வாறு என கிரிக்கெட் விமர்சகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதில், குறிப்பாக மேல் மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட அனைவருமே கொழும்பு மாவட்டத்திலிருந்தே, அதுவும் பிரசித்தி பெற்ற பாடசாலைகளிலிருந்தே தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

26 பேரில் ஒருவர் மாத்திரமே காலி மாவட்டத்தின் அம்பலாங்கொடையிலுள்ள பெரிதாக அறியப்படாத மதம்பாகம வித்தியாலயத்தின் பாடசாலை வீரர் ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார் என அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

மேலும், இந்த குழாமில் ஒரு தமிழ் பேசும் வீரர் கூட இணைக்கப்படாமை வருந்தத்தக்க விடயமாகும் எனவும், கிரிக்கெட்டை மென்மேலும் கட்டியெழுப்புவதாயின் குறிப்பிட்ட ஒரு சில பகுதிகளுக்கு மாத்திரம் வரையறுக்காது நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் கொண்டு செல்வதுடன், தேசிய மட்ட குழாமொன்றில் பின்தங்கிய மாகாணங்களிலிருந்தும் சிறப்பு சலுகை அடிப்படையில் அவர்களை இணைத்துக் கொள்வது சிறப்பானதாக இருக்கும் என கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad