கட்டம் கட்டமாக 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கும் தடுப்பூசி - தென் மாகாண கொவிட் சிறுவர் சிகிச்சைப் பிரிவு திறப்பு விழாவில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ - News View

Breaking

Sunday, August 15, 2021

கட்டம் கட்டமாக 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கும் தடுப்பூசி - தென் மாகாண கொவிட் சிறுவர் சிகிச்சைப் பிரிவு திறப்பு விழாவில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ

12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு கட்டம் கட்டமாக கொவிட் தடுப்பூசி வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (15) தெரிவித்தார்.

அம்பாந்தோட்டை மருத்துவமனையில் ஸ்தாபிக்கப்பட்ட தென் மாகாண கொவிட்-19 சிறுவர் சிகிச்சைப் பிரிவு திறப்பு விழாவில், தங்காலை கார்ல்டன் இல்லத்திலிருந்து வீடியோ தொழில்நுட்பம் மூலம் இணைந்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இதனைத் தெரிவித்தார்.

சிறுவர்களுக்கு தடுப்பூசி வழங்கும்போது, நோய் பாதிப்பு ஏற்படக் கூடிய பல்வேறு பிரச்சினைகளுடன் கூடிய குழந்தைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் பிரதமர் கூறினார்.

பிரதமரின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ, பாரம்பரிய முறையில் விளக்கேற்றி, அம்பாந்தோட்டை மருத்துவமனையில், தென் மாகாண கொவிட்-19 சிறுவர் மருத்துவ பிரிவை திறந்து வைத்தார். 

அதனைத் தொடர்ந்து வைத்தியசாலையின் மருத்துவர்கள் உள்ளிட்ட தாதியர்கள், ஊழியர்களுடன் கண்காணிப்பு சுற்றுப்பயணத்தை அவர் மேற்கொண்டிருந்தார்.

அம்பாந்தோட்டை மருத்துவமனையில் கொவிட் சிகிச்சைகள் முதன்முதலில் கடந்த 2020 மார்ச்சில் ஆரம்பிக்கப்பட்டது. அப்போதிருந்து, இதுவரை சுமார் 6,000 தொற்றாளர்கள் சிகிச்சை பெற்றுள்ளனர்.

தற்போதுவரை, கொவிட் தொற்றைக் கொண்ட சிறுவர்களுக்கான சிகிச்சைகள் பெண்கள் வார்டில் இடம்பெற்று வந்தது.

தற்போது புதிய பிரிவு நிறுவுப்பட்டதன் மூலம், சிறுவர்கள் மீது விசேட கவனம் செலுத்த முடியுமென மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஒவ்வொரு மாகாணத்திலும் சிறுவர்களுக்கென தனியான கொவிட்-19 மருத்துவ பிரிவுகளை நிறுவுவது, சிறுவர்கள் மருத்துவ நிபுணர்கள் சங்கத்தின் எண்ணக்கருவாக காணப்படுகின்றது.

No comments:

Post a Comment