சிறுவர்களின் முறையற்ற காணொளிகள், புகைப்படங்களை பதிவேற்றிய 10 பேர் சிக்கினர் : இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவதை தவிர்த்துக் கொள்ளுமாறு பொலிஸார் வேண்டுகோள் - News View

Breaking

Sunday, August 8, 2021

சிறுவர்களின் முறையற்ற காணொளிகள், புகைப்படங்களை பதிவேற்றிய 10 பேர் சிக்கினர் : இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவதை தவிர்த்துக் கொள்ளுமாறு பொலிஸார் வேண்டுகோள்

சிறுவர்களை முறையற்ற வகையில் காண்பிக்கும் வகையிலான காணொளிகள் மற்றும் புகைப்படங்களை சேகரித்த அல்லது சமூக வலைத்தளங்களில் பதிவேற்றிய 10 நபர்கள் தொடர்பில் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த அனைவரையும் அடுத்த வாரமளவில் கைது செய்யவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், சிறுவர் மற்றும் மகளிர் பொலிஸ் பிரிவினால் சிறுவர்கள் தொடர்பான முறையற்ற காணொளிகள் அல்லது புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்படுகின்றமை தொடர்பில் விசேட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறன.

இதனிடையே, சிறுவர் மற்றும் மகளிர் பொலிஸ் பிரிவில் உள்ள விசேட பிரிவு மற்றும் நவீன தொழிநுட்ப உபகரணங்கள் ஊடாக நாட்டில் எந்தவொரு பகுதியிலிருந்தும் மேற்குறிப்பிட்டவாறான காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் எந்த முறைமையைப் பயன்படுத்தியேனும் சமூக வலைத்தளங்களில் சேகரிக்கப்படுமாயின் அந்த சந்தர்ப்பத்திலேயே அது தொடர்பில் அறிந்து கொள்ள முடியும். எனவே இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவதை  தவிர்த்துக் கொள்ளுமாறு சகலரிடமும் கேட்டுக் கொள்கின்றோம் என்றார்.

நேற்று முன்தினம் (06) படல்கும்புர பகுதியைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டதாகவும் குறித்த நபரால் போலி முகப்புத்தகத்தின் ஊடாக (Facebook) சுமார் 500 ஆபாச காணொளிகள் இணையத்தளங்களில் பதிவேற்றப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டதாகவும் பொலிஸ் ஊடகப் ​பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த நபர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டதை அடுத்து, எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment