நாட்டிற்கு முதல்முறையாக 26,000 டோஸ் Pfizer கொவிட் தடுப்பூசி வந்தடைந்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் தயாரிக்கப்படும் Pfizer-BioNTech தடுப்பூசியை கொள்வனவு செய்த முதலாவது தெற்காசிய நாடு இலங்கையாகும்.
இது தொடர்பில் தனது ட்விற்றர் கணக்கில் பதிவொன்றை இட்டு, மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தனது அரசாங்கத்தில் அனைத்த இலங்கையர்களுக்கும் தடுப்பூசி கிடைப்பது தொடர்பான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை தொடர்பில் தான் பெருமையடைவதாகவும் தெரிவித்துள்ளார். தடுப்பபூசி வழங்கல் நாடு முழுவதும் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த வாரம் பாகிஸ்தானுக்கு COVAX இலவச தடுப்பூசி திட்டத்தின் கீழ் ஒரு இலட்சம் தடுப்பூசி கிடைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த பைசர் தடுப்பூசியை விரைவில் மக்களுக்கு வழங்கத் தேவையான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண மேலும் தெரிவித்தார்.
5 மில்லியன் டோஸ் பைசர் தடுப்பூசியை பெற இலங்கை திட்டமிட்டுள்ள நிலையில், இம்மாதம் சுமார் 200,000 தடுப்பூசிகள் இலங்கையை வந்தடையவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமண மேலும் தெரிவித்தார். (UPDATED)
No comments:
Post a Comment