இலங்கையை இதுவரை வந்தடைந்த தடுப்பூசி டோஸ்கள் ஒரு கோடி - Moderna முதல் தொகுதி இன்று வந்தடைந்தன - இதுவரை முதல் டோஸ் தடுப்பூசி பெற்றவர்கள் தொகை 5 மில்லியனை கடந்தது - News View

Breaking

Post Top Ad

Friday, July 16, 2021

இலங்கையை இதுவரை வந்தடைந்த தடுப்பூசி டோஸ்கள் ஒரு கோடி - Moderna முதல் தொகுதி இன்று வந்தடைந்தன - இதுவரை முதல் டோஸ் தடுப்பூசி பெற்றவர்கள் தொகை 5 மில்லியனை கடந்தது

இலங்கைக்கு இதுவரை ஒரு கோடி (10 மில்லியன்) டோஸ் கொவிட் தடுப்பூசிகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக, இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்தார்.

இன்று (16) காலை இலங்கைக்கு 1.5 மில்லியன் மொடர்னா கொவிட் தடுப்பூசி டோஸ்கள் கிடைக்கப் பெற்றதைத் தொடர்ந்து, இதுவரை இலங்கைக்கு கிடைக்கப் பெற்ற மற்றும் கொள்வனவு செய்த 5 வகை கொவிட் தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 10 மில்லியனை (10,098,100) கடந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

COVAX உலகளாவிய தடுப்பூசி பகிரும் திட்டத்தின் கீழ், இன்று (16) காலை அமெரிக்காவினால் 1.5 மில்லியன் (1,500,100) Moderna கொவிட் தடுப்பூசிகள் இலங்கையை வந்தடைந்தன. 

கட்டார் எயார்வேஸ் விமானம் மூலமாக அவை இன்று காலை வந்தடைந்ததாக, இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்திருந்தது.

இதேவேளை மேலும் 5.2 மில்லியன் தடுப்பூசிகள் இம்மாத இறுதியில் இலங்கையை வந்தடையவுள்ளதாக சன்ன ஜயசுமண தெரிவித்தார்.

இலங்கையிலுள்ள 5 மில்லியனுக்கும் அதிகமான (5,175,605) மக்கள் இதுவரை கொவிட்-19 முதலாவது டோஸ் தடுப்பூசியை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தற்போது கிடைக்கப் பெற்றுள்ள மொடர்னா கொவிட் தடுப்பூசிகளை கண்டி மாவட்டத்தில் வழங்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமண தெரிவித்தார். Pfizer தடுப்பூசியும் Moderna தடுப்பூசியும் கிட்டத்தட்ட ஒரே வகையானவை என அவர் சுட்டிக்காட்டினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad