லம்ப்டா வைரஸ் இலங்கைக்குள் நுழையும் வாய்ப்பு : பி.சி.ஆர் நூற்றுக்கு நூறு வீதம் சரியானவை என கூற முடியாது : பாதிப்பை தவிர்க்கவே இராணுவத்தினரால் தடுப்பூசி வழங்கல் - விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் - News View

Breaking

Post Top Ad

Thursday, July 8, 2021

லம்ப்டா வைரஸ் இலங்கைக்குள் நுழையும் வாய்ப்பு : பி.சி.ஆர் நூற்றுக்கு நூறு வீதம் சரியானவை என கூற முடியாது : பாதிப்பை தவிர்க்கவே இராணுவத்தினரால் தடுப்பூசி வழங்கல் - விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத்

(நா.தனுஜா)

தென் அமெரிக்காவில் புதிதாக அடையாளங்காணப்பட்டிருக்கும் கொவிட்-19 வைரஸின் திரிபான லம்ப்டா வைரஸ் இலங்கையில் பரவுவதைத் தடுப்பதற்கு அவசியமான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. ஆனால் பி.சி.ஆர் பரிசோதனைகளின் துல்லியமற்ற தன்மை மற்றும் 14 நாட்கள் தனிமைப்படுத்தல் காலத்தின் பின்னரும் ஒருவரின் உடலில் நிலைத்திருக்கக் கூடிய வைரஸ் திரிபுகளின் தன்மை ஆகிய காரணங்களினால் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் லம்ப்டா வைரஸ் இலங்கைக்குள் உள்நுழையக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளன. எனினும் அனைவரும் உரிய சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றும் பட்சத்தில் ல்ம்ப்டா வைரஸ் உள்நுழைந்தாலும், அதன் பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தினால் புதன்கிழமை அரசாங்கத்தகவல் திணைக்களத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது, கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட தடுப்பூசி நிலையங்களில் அஸ்ராசெனேகா முதலாம் கட்டத் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ள 55 - 69 வயதிற்குட்பட்டோருக்கு இரண்டாம் கட்டமாக பைஸர் தடுப்பூசியை வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அதன்படி முதலாம் கட்டத் தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டபோது கையடக்கத் தொலைபேசி இலக்கத்தை வழங்கியவர்களுக்கு குறுஞ் செய்தி மூலமும் நிலையான தொலைபேசியின் இலக்கத்தை வழங்கியவர்களுக்கு தொலைபேசி அழைப்பின் மூலமும் உரிய விபரங்கள் அறிவிக்கப்படும். எனவே யாரும் பதற்றமடையத் தேவையில்லை.

அதேவேளை எதிர்வரும் காலத்தில் பைஸர் தடுப்பூசி முதலாம் கட்டமாக வழங்கப்படும் போது அதற்கு இரண்டாம் கட்டத் தடுப்பூசியும் வழங்கப்பட வேண்டும்.

மேலும் சுகாதாரப் பணியாளர்களினால் முன்னெடுக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கையின் காரணமாக தடுப்பூசி வழங்கல் செயற்பாடுகள் பாதிப்படைவதைத் தவிர்ப்பதற்காகவே இராணுவத்தினரால் தடுப்பூசி வழங்கல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன. அச்சேவைக்கான அவசியம் தொடர்ந்தும் காணப்படும் பட்சத்தில் இராணுவத்தினரால் முன்னெடுக்கப்படும் தடுப்பூசி வழங்கல் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும்.

அடுத்ததாக கொவிட்-19 வைரஸின் எந்தவொரு திரிபுகளும் அவை இனங்காணப்படும் நாடுகளிலிருந்து அதிகளவானோர் பயணங்களை மேற்கொள்ளும் ஏனைய நாடுகளுக்கே விரைவாகப் பரவுகின்றன. எனவே தென் அமெரிக்காவில் இனங்காணப்பட்டிருக்கும் திரிபடைந்த லம்ப்டா வைரஸானது, அங்கிருந்து இலங்கைக்கு வருகை தருபவர்கள் மூலம் பரவக்கூடும்.

எனவே அந்த திரிபு எப்போது இலங்கையில் பரவும் என்று குறிப்பாகக் கூறமுடியாது. ஆனால் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அது இலங்கையிலும் பரவக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளன. பி.சி.ஆர் பரிசோதனைகள் மற்றும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் மூலம் இதன் பரவலை இயலுமானவரையில் கட்டுப்படுத்த முடியும்.

ஆனால் பி.சி.ஆர் பரிசோதனைகள் நூற்றுக்கு நூறு சதவீதம் சரியானவை என்று கூற முடியாது. அதிலும் வழுக்கள் ஏற்படக்கூடும் என்பதால், சில சந்தர்ப்பங்களில் தொற்றாளரை அடையாளங்காண முடியாமலும் போகலாம்.

அதுமாத்திரமன்றி 14 நாட்கள் தனிமைப்படுத்தல் காலத்திற்கும் அதிக காலம் சிலரது உடலில் இந்த வைரஸ் திரிபுகள் நிலைத்திருக்கக் கூடும். ஆகவே எம்மால் முன்னெடுக்கப்பட்டு வரும் அனைத்து சுகாதாரப் பாதுகாப்பு கட்டுப்பாடுகளையும் தாண்டி, இந்த லம்ப்டா வைரஸ் இலங்கையிலும் பரவக்கூடும். ஆகவே சுகாதார வழிகாட்டல்களை உரியவாறு பின்பற்றினால், இந்த வைரஸ் நாட்டிற்குள் வந்தாலும் அதன் பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என்று குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad