அவசர சந்திப்பை மேற்கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் - News View

About Us

About Us

Breaking

Saturday, July 3, 2021

அவசர சந்திப்பை மேற்கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுக்கிடையில் (நேற்று) சனிக்கிழமை அவசர சந்திப்பொன்று இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் மார்ட்டின் வீதியில் உள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைமைச் செயலகத்தில் நடந்த இந்த சந்திப்பு காலை 11.30 மணி தொடக்கம் மதியம் 01.00 மணி வரை இடம்பெற்றது.

இதில் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழரசுக் கட்சியின் சிரேஸ்ட துணைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் ரெலோ இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சந்திப்புக்குப் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ரெலோவின் தலைவரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், இன்றைய சந்திப்பு முடிவின் பிரகாரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக நாங்கள் அனைவரையும் அரவணைத்து போகின்ற நிலைமையை கையாளுகின்ற ஒரு செயற்பாட்டை செய்வதற்கு முற்றுமுழுதாக முடிவு எடுக்கப்பட்டிருக்கின்றது என்றார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், அந்த வகையிலே நாளை (இன்று) நடைபெறவுள்ள கூட்டத்தில் நாங்கள் எப்படி செயல்பட வேண்டும், தொடர்ந்து அதை எப்படி நாம் கையாள வேண்டும் என்பது தொடர்பில் முடிவை எடுப்போம் .

என்னென்ன விடயங்கள் கலந்துரையாடப்பட்டது என்பது தொடர்பில் கேள்வியெழுப்பிய போது, நிலம் சம்பந்தமாகவும், மாகாண சபைகள் சம்பந்தமாகவும், எங்களுடைய இனம் சார்ந்த பூர்வீகத்தை உடைத்தெறிந்து வரலாற்றை சிதைக்கின்ற செயற்பாடுகளை நிறுத்துவதற்கு பலத்தை உருவாக்குவதற்கு பலமான சக்தியாக தமிழ்த் தரப்பு இருக்க வேண்டும்.

அப்படி இருக்கின்றபோது புலம்பெயர்ந்த உறவுகளையும் தமிழ் நாட்டு தமிழர்களையும் இணைத்து செயற்படும்போது பெரிய பலத்தை பெறுகின்ற வாய்ப்பு ஏற்படும். அப்போதுதான் இப்பொழுது இருக்கிற அரசாங்கத்தை நாங்கள் பல விடயங்களில் தடுத்து நிறுத்த முடியும் எனத் தெரிவித்தார்.

No comments:

Post a Comment