இலங்கை கடற்பரப்பில் தீ விபத்திற்குள்ளான எம்.வி. எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் : அமைச்சர் டக்ளஸிடம் ஆய்வறிக்கையை கையளித்த இந்திய உயர்ஸ்தானிகர் - News View

About Us

About Us

Breaking

Saturday, July 3, 2021

இலங்கை கடற்பரப்பில் தீ விபத்திற்குள்ளான எம்.வி. எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் : அமைச்சர் டக்ளஸிடம் ஆய்வறிக்கையை கையளித்த இந்திய உயர்ஸ்தானிகர்

(எம்.மனோசித்ரா)

இலங்கை கடற்பரப்பில் தீ விபத்திற்குள்ளான எம்.வி. எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலருகில் இந்திய கடற்படைக் கப்பல் சர்வேக்‌ஷாக் 800 மைல்கள் ஆய்வை நிறைவு செய்துள்ளது. இந்த ஆய்வின் அறிக்கை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவினால் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இந்திய கடற்படையின் நீரியல் ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளும் ஐ.என்.எஸ் சர்வேக்‌ஷாக் கப்பல் கொழும்புக்கு அப்பால் உள்ள மூன்று பிராந்தியங்களில் வெற்றிகரமாக ஆய்வினை நிறைவு செய்து கொழும்பை வந்தடைந்துள்ளதாக கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

தீ விபத்திற்குள்ளான பேர்ள் கப்பலை சூழவுள்ள பகுதிகளில் ஆய்வினை மேற்கொள்வதற்காக ஜூன் 23 ஆம் திகதி இலங்கை அரசாங்கம் விடுத்திருந்த கோரிக்கைக்கு அமைவாக ஐ.என்.எஸ் சர்வேக்ஷாக் கப்பல் உடனடியாக பணியில் அமர்த்தப்பட்டது. 

இந்திய கடற்படை, இலங்கை கடற்படை மற்றும் தேசிய நீரியல்வள ஆய்வு அபிவிருத்தி அமைப்பு (நாரா) ஆகியவை ஒன்றிணைந்து இந்த ஆய்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இந்த ஆய்வின் நிறைவினை குறிக்கும் முகமாக வெள்ளிக்கிழமை விசேட நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்வில் மீன்பிடித்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது இந்த ஆய்வின் தகவல்கள் அடங்கிய பரந்த அறிக்கையொன்று இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லேவினால் அமைச்சரிடம் கையளிக்கப்பட்டது.

நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இந்திய அரசாங்கத்திற்கும் குறிப்பாக துரிதகதியில் நடவடிக்கைகளை மேற்கொண்ட இந்திய கடற்படைக்கும் நன்றியினை தெரிவித்திருந்தார். 

பிராந்தியத்தில் சகலருக்கும் பாதுகாப்பும் வளர்ச்சியும் என்ற இந்தியாவின் சாகர் கொள்கையினை இச்செயற்பாடுகள் வெளிப்படுத்துவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.

கடலில் ஏற்படும் பல்வேறு அனர்த்தங்களின் போது அவற்றினை எதிர்கொள்வதற்காக இந்தியாவும் இலங்கையும் பல்வேறு சந்தர்ப்பங்களில் ஒன்றிணைந்து செயற்பட்டிருப்பதாக இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே இந்த சந்தர்ப்பத்தில் சுட்டிக்காட்டியிருந்தார்.

அத்துடன் ஒப்பரேஷன்சாகர் ஆரக்‌ஷா 2 நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்திய கரையோர காவல் படை கப்பல்களை பார்வையிடுவதற்கான சந்தர்ப்பம் கிடைத்தமையையிட்டும் ஐஎன்எஸ் சர்வேக்‌ஷா கப்பலினால் முன்னெடுக்கப்பட்ட ஆய்வுப் பணிகளில் நிறைவை கொண்டாடும் பாராட்டு நிகழ்வில் பங்கேற்பதற்கு வாய்ப்பு கிடைத்ததற்காகவும் தனிப்பட்ட ரீதியில் அவர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்தார்.

இலங்கையின் மேற்குக் கரையோரத்தில் வாழ்ந்து வரும் இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான இந்தியாவின் உதவி குறித்தும் அவர் இங்கு குறிப்பிட்டிருந்தார்.

மிக மோசமான காலநிலைக்கு மத்தியிலும் இரு ஆய்வுப் படகுகள் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட சென்சார் கருவிகள் ஆகியவற்றை பயன்படுத்தி 807 மைல்கள் சைட் ஸ்கேன் சோனார் ஆய்வினை ஐ.என்.எஸ் சர்வேக்‌ஷாக் கப்பல் நிறைவு செய்துள்ளது. 

தற்போது இந்த ஆய்வினை மேற்கொள்ளாதுவிடில் கடல் கொந்தளிப்பு காரணமாக இந்த ஆய்வுப் பணிகள் ஒக்டோபர் பருவமழைக்கு பின்னரான காலத்துக்கு பின்தள்ளப்படும் நிலை உருவாகியிருக்கும்.

குறித்த கால எல்லைக்குள் பணிகளை முடிப்பதற்காக பகலில் சேகரித்த ஜிகாபைட்ஸ் தரவுகளை இரவிரவாக ஆய்வு செய்து இந்த ஆய்வுப் பணிகளை இக்கப்பலைச் சேர்ந்த குழுவினர் நிறைவு செய்துள்ளனர். 

இந்த ஆய்வின் பின்னர் நீரின் கீழ் 54 சிதைவு பொருட்களையும் ஒரு கப்பலின் சிதைந்த பாகத்தையும் கண்டறிய முடிந்துள்ளது. இந்த ஆய்வு தகவல்களின் அடிப்படையில் மீனவர்களுக்கும் ஏனைய மாலுமிகளுக்கும் உரிய ஆலோசனைகளையும் வழங்க முடியும். அத்துடன் கடற்பயணங்களை உறுதிப்படுத்துவதற்காக சிதைவுகளை அகற்றும் பணிகளுக்கு ஆதாரமாக அமையும்.

No comments:

Post a Comment