போராட்டத்தில் மரணித்தவர்களை வைத்து அரசியல் செய்வதை தமிழ் தலைமைகள் நிறுத்த வேண்டும் : முஸ்லிம் அரசியல்வாதிகளிடமிருந்து தமிழ் அரசியல்வாதிகள் கற்றுக் கொள்ள வேண்டும் - அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் - News View

Breaking

Post Top Ad

Tuesday, July 20, 2021

போராட்டத்தில் மரணித்தவர்களை வைத்து அரசியல் செய்வதை தமிழ் தலைமைகள் நிறுத்த வேண்டும் : முஸ்லிம் அரசியல்வாதிகளிடமிருந்து தமிழ் அரசியல்வாதிகள் கற்றுக் கொள்ள வேண்டும் - அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன்

தமிழ் அரசியவாதிகள் தூரநோக்குடன் சிந்தித்து செயல்பட வேண்டும். போராட்டத்தில் மரணித்த மக்களின் உடல்களில் ஏறிக் கொண்டு அரசியல் சவாரி செய்வதை தமிழ்த் தலைமைகள் நிறுத்த வேண்டும் என இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு செங்கலடி ரமேஸ்புரம் பிரதேசத்தில் வீதி மற்றும் வடிகாணிற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (18) இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தலைமையில் இடம்பெற்றது.

பூஜை வழிபாடுகளுடன் 40.4 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் இவ் வீதி மற்றும் வடிகாண் வேலைகள் சுபீட்சத்தின் கீழ் நாட்டை கட்டியெழுப்புவோம் எனும் ஜனாதிபதியின் தொனிப் பொருளுக்கமைய ஒரு இலட்சம் கிலோ மீற்றர் வீதி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் மற்றுமொறு கட்டம் ரமேஸ்புரம் பகுதியில் ஆரம்பிக்கப்பட்டன.

இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன், ஏறாவூர்பற்று செங்கலடி பிரதேச தவிசாளர் சி.சர்வானந்தன், செங்கலடி பிரதே சபை செயலாளர், வீதி அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகள் மற்றும் தமிழர் முற்போக்கு கழக உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இந் நிகழ்வில் உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன், ஜனாதிபதியின் சுபீட்சத்தின் பால் நாட்டைக் கட்டியெழுப்புவோம் எனும் தொனிப் பொருளின் கீழ் பல்வேறு வேலைத்திட்டங்கள் நடைபெறுகின்றது. 

எதிர்க் கட்சியினரால் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும் விமர்சனங்களையும், விசமத்தனங்களையும் கடந்து நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டும். நாட்டு மக்களை பாதுகாக்க வேண்டும் என்ற விடயத்தில் அரசாங்கம் முனைப்பாகச் செயற்படுகின்றது.

2019 ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதலின் பின் சுற்றுலாத்துறையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டது.

ஒரு வருட காலத்தினுள் அரசாங்கம் பல வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளது. குடிநீர் அற்றோருக்கு குடிநீர்த் திட்டத்திற்கான வேலைகள் நடைபெறுகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு வருடகாலப்பகுதியில் 15 தேசிய பாடசாலைகளை பெற்றுக் கொடுத்திருக்கின்றோம்.

உலக நாடுகளில் 50 நாடுகளுக்கு மேல் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ள முடியாமல் உள்ளார்கள். தடுப்பூசிகளுக்கு தட்டுபாடு உள்ளது. எமது நாட்டில் சீனா, அமெரிக்கா, இந்தியா, போன்ற நாடுகளில் இருந்து தடுப்பூசிகளை அரசாங்கம் கொண்டு வந்து கொண்டிருக்கின்றது. இன்னும் தடுப்பூசிகள் நாட்டு மக்களுக்கு வழங்க வேண்டும் என்பதில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதுடன் கொரோனா தொற்றிலிருந்து நாட்டு மக்களை பாதுகாப்பதில் துரித கவனம் செலுத்தி வருகின்றது.

முஸ்லிம் அரசியல்வாதிகள் தேர்தல் காலத்தில் கடுமையாக சண்டை பிடிப்பார்கள். சமூகத்தில் பிளவுகள் நடைபெறும். ஆனால் தேர்தல் முடிந்ததும் தேர்தல் கால வன்முறைகளை மறந்து, தனது சமூகத்திற்காக ஒற்றுமையாக செயற்படுவர். இதை ஒரு சில தமிழ் அரசியல்வாதிகள் கற்றுக்கொள்ள வேண்டும்.

போராட்டத்தில் மரணித்த மக்களின் உடல்களில் ஏறிக் கொண்டு அரசியல் செய்வதை தமிழ்த் தலைமைகள் நிறுத்தி தமிழ் மக்களின் நல்லெண்ணங்களுக்கு மதிப்பளித்து அவர்களின் அடிப்படைப் பிரச்சினைக்கு தமிழ் அரசியல்வாதிகள் செயற்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.

வெல்லாவெளி நிருபர்

No comments:

Post a Comment

Post Bottom Ad