நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த பயணத்தடை காரணமாக தற்போது கொரோனா வைரஸ் மரணங்கள் குறைவடைந்து வருவதாக இலங்கை மருத்துவர் சங்கத்தின் தலைவர் விசேட மருத்துவ நிபுணர் பத்மா எஸ். குணரட்ண தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும் தற்போது நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ள வேகமாக பரவக்கூடிய டெல்டா திரிபு கொரோனா வைரஸ் தொடர்பில் மேலும் ஒரு மாதத்திற்குப் பின்னரே ஒரு நிலைப்பாட்டுக்கு வர முடியுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் டெல்டா திரிபு வைரஸ் கொழும்பு உள்ளிட்ட மேலும் சில பிரதேசங்களில் பரவியுள்ளமை இனங்காணப்பட்டுள்ள நிலையில் அந்த வைரஸ் தொற்றாளர்கள் மேலும் 14 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
நாட்டில் பயணத்தடையை ஏற்படுத்தி மேற்கொண்ட நடவடிக்கைகளின் காரணமாகவே தற்போது வைரஸ் தொற்று பரவல் சாதாரண நிலைக்கு வந்துள்ளது. மரணங்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதையடுத்து தற்போது பரவிவரும் வைரஸ் தொற்று தொடர்பிலான பிரதிபலனை மேலும் ஒரு மாதத்துக்கு பின்னரே கண்டுகொள்ள முடியும்.
எனினும் மக்களின் அலட்சியப் போக்கினால் மேற்படி தொற்று விரைவாக நாடு முழுவதும் பரவக்கூடிய அபாயம் காணப்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் மேலும் துரிதப்படுத்தப்பட வேண்டும்.
அதேவேளை டெல்டா திரிபு வைரஸ் நோய் தொற்றாளர்கள் கொழும்பு மாநகர சபை எல்லைக்குள்ளும்,அங்கொட உளநல விஞ்ஞான நிறுவனத்திலும் கராபிட்டிய போதனா வைத்தியசாலை மற்றும் மாத்தறை தனியார் வைத்திய சாலையிலும் கிடைத்துள்ள மாதிரிகளுக்கு இணங்கவே அடையாளம் காணப்பட்டுள்ளது.
மேற்படி மாதிரிகள் பெறப்பட்டுள்ள நபர்கள் மற்றும் அவர்கள் வசிக்கும் பிரதேசங்களை அடையாளம் காணும் நடவடிக்கைகளை தொற்றுநோய் தடுப்பு பிரிவு மேற்கொண்டு வருகிறது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
லோரன்ஸ் செல்வநாயகம்
No comments:
Post a Comment