நீதி கோரும் ஆர்ப்பாட்டக்காரர்களை கைது செய்யும் பொலிஸ்மா அதிபருக்கு பசிலிற்காக பட்டாசு கொளுத்தி கொண்டாடியவர்களை கண்ணுக்கு தெரியவில்லையா? : கேள்வி எழுப்பினார் முஜிபுர் ரஹ்மான் - News View

About Us

About Us

Breaking

Saturday, July 10, 2021

நீதி கோரும் ஆர்ப்பாட்டக்காரர்களை கைது செய்யும் பொலிஸ்மா அதிபருக்கு பசிலிற்காக பட்டாசு கொளுத்தி கொண்டாடியவர்களை கண்ணுக்கு தெரியவில்லையா? : கேள்வி எழுப்பினார் முஜிபுர் ரஹ்மான்

(நா.தனுஜா)

அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாடுகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். ஆனால் பசில் ராஜபக்ஷ அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டதையடுத்து, அவரது ஆதரவாளர்கள் ஒன்றுதிரண்டு பட்டாசு கொளுத்தி கொண்டாடினார்கள். இவையனைத்தும் பொலிஸ்மா அதிபரின் கண்களுக்குத் தெரியவில்லையா? இதன்போது தனிமைப்படுத்தல் சட்டம் மீறப்படவில்லையா? ஏன் அவர்களைக் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தவில்லை? அவர்களை ஏன் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்குக் கொண்டுசெல்லவில்லை? என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது, நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் கடந்த வருடம் ஆரம்பமானதிலிருந்து தற்போது வரையான காலப்பகுதியில் பொதுமக்களின் வாழ்வாதாரம் முழுமையாகப் பாதிப்படைந்திருக்கின்றது. இதுவரையில் 3 இலட்சத்திற்கும் அதிகமான கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளங்காணப்பட்டிருக்கிறார்கள்.

இந்த வைரஸ் பரவலால் உலகின் அனைத்து நாடுகளும் பாதிப்படைந்திருக்கும் நிலையில், அதிலிருந்து மீள்வதையும் பொதுமக்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுப்பதையும் முதன்மை நோக்கமாகக் கொண்டே ஏனைய நாடுகள் செயற்பட்டுவருகின்றன.

ஆனால் துரதிஷ்டவசமாக எமது நாட்டின் மக்களின் சுகாதாரப் பாதுகாப்பையும் வாழ்வாதாரத்தையும் உறுதிப்படுத்துவதை விடுத்து, தத்தமது தனிப்பட்ட நலன்களை உறுதிப்படுத்திக் கொள்வதை இலக்காகக் கொண்டே அரசாங்கம் கடந்த ஒன்றரை வருட காலமாக செயற்பட்டு வருகின்றது.

கொரோனா வைரஸ் பரவலினால் நாட்டு மக்களின் வாழ்வாதாரம் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றது. அவர்களுக்கு அவசியமான நிவாரணங்களைப் பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கம் எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. மாறாக அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் உணவுப் பொருட்களின் விலைகளும் உயர்த்தப்படுகின்றன.

அதுமாத்திரமன்றி அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாடுகளினால் நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்திருந்த பலதரப்பட்ட துறையினரும் வீதிகளில் இறங்கிப் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

இவ்வாறானதொரு சூழ்நிலையிலேயே அரசாங்கத்தினால் ஜோன் கொத்தலாவல தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகம் தொடர்பான சட்ட மூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. எதிர்க்கட்சி என்ற அடிப்படையில் இப்போது இந்நச் சட்ட மூலத்தைக் கொண்டுவர வேண்டாம் என்று நாம் வலியுறுத்தியிருந்த அதேவேளை, மாணவர்களும் அதற்கெதிராக வீதிகளில் இறங்கிப் போராடினார்கள்.

மேலும் இந்தச் சட்ட மூலத்திற்கு எதிராக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஜோசப் ஸ்டாலின் உள்ளடங்கலாக ஆசிரியர்கள், புத்திஜீவிகள் பலரும் ஒன்றிணைந்து பாராளுமன்ற சுற்றுவட்டத்தில் சுகாதாரப் பாதுகாப்பு வழிகாட்டல்களைப் பின்பற்றி ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.

எனினும் பொலிஸார் அவர்களை வலுகட்டாயமாகக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தியிருந்த நிலையில், நீதிமன்றத்தினால் அவர்களுக்குப் பிணை வழங்கப்பட்டது. அதன் பின்னர் அவர்கள் பொலிஸாரால் பலவந்தமாகத் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

தமக்கு எதிராக முன்வைக்கப்படும் விமர்சனங்களையும் எதிர்ப்பலைகளையும் தனிமைப்படுத்தல் சட்டத்தைப் பயன்படுத்தி அடக்குவதற்கு அரசாங்கம் முற்பட்டுள்ளமை இவற்றின் மூலம் தெளிவாகின்றது.

குறிப்பாக அரசாங்கத்தின் அழுத்தத்திற்கு அமைவாகவே ஆர்ப்பாட்டங்கள், ஒன்றுகூடல்களைத் தடை செய்யுமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் பொலிஸ்மா அதிபருக்குக் கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்தை அடிப்படையாகக் கொண்டுதான் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். மாறாக நாட்டில் அத்தகைய சட்டங்கள் எவையும் இல்லை.

எனவே அரசியல்வாதிகளின் தனிப்பட்ட தேவைகளுக்காக சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்த வேண்டாம் என்று பொலிஸாரிடம் கேட்டுக் கொள்கின்றோம். மக்களின் வரிப்பணத்தின் ஊடாகவே பொலிஸாருக்கு ஊதியம் வழங்கப்படுகின்றது என குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment