இலங்கையில் கொரோனா பரவலை தற்போது மீண்டும் ஓரளவிற்கு கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடிந்துள்ளது - பொதுமக்கள் தவறாகப் புரிந்து கொள்ளாது, தொடர்ந்தும் சுகாதாரப் பாதுகாப்பு வழிகாட்டல்களை பின்பற்றவும் - News View

About Us

About Us

Breaking

Wednesday, July 7, 2021

இலங்கையில் கொரோனா பரவலை தற்போது மீண்டும் ஓரளவிற்கு கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடிந்துள்ளது - பொதுமக்கள் தவறாகப் புரிந்து கொள்ளாது, தொடர்ந்தும் சுகாதாரப் பாதுகாப்பு வழிகாட்டல்களை பின்பற்றவும்

(நா.தனுஜா)

நாட்டில் சிங்கள, தமிழ் புதுவருடத்தின் பின்னர் மீண்டும் தீவிரமடைய ஆரம்பித்து, கடந்த மே மாதமளவில் நாளொன்றுக்கு 3000 - 3500 தொற்றாளர்கள் இனங்காணப்படும் அளவிற்கு உச்சத்தைத் தொட்ட கொரோனா வைரஸ் பரவலைத் தற்போது மீண்டும் ஓரளவிற்குக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடிந்திருப்பதாக சுகாதாரப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த இரு தினங்களில் ஆயிரத்திற்கும் குறைவான கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் மாத்திரம் பதிவானமையை 'அசாதாரணமான நிலைமை' என்று வர்ணித்திருக்கும் சுகாதார அமைச்சின் தொற்றுநோய்த் தடுப்புப் பிரிவின் சிரேஷ்ட தொற்றுநோய்த் தடுப்பு விசேட வைத்திய நிபுணர் சமித கினிகே, சுகாதாரப் பணியாளர்களால் மேற்கொள்ளப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கையின் காரணமாக மாதிரிகளைப் பெறுவதிலும் பரிசோதனைகளை மேற்கொள்வதிலும் ஏற்பட்ட தாமதமே அவ்வாறானதொரு 'அசாதாரண தொற்றாளர் எண்ணிக்கை வீழ்ச்சிக்கு' காரணமாக அமைந்திருக்கக் கூடும் என்றும் சுட்டிக் காட்டியுள்ளார்.

ஓரளவிற்குக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டிருக்கும் தொற்றுப்பரவல்

சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தினால் இன்று புதன்கிழமை அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர், கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதமளவில் பேலியகொட மீன்சந்தை மற்றும் பிரென்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலை ஆகியவற்றில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் கொத்தணிகளின் பாதிப்பிற்கு வருடம் முழுவதும் முகங்கொடுக்க வேண்டிய நிலையேற்பட்டது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதமளவில் தொற்றுப் பரவலின் தீவிரம் சற்றுக் குறைவடைந்த போதிலும், மீண்டும் உற்சவகாலக் கொண்டாட்டங்களுடன் இவ்வருடம் ஜனவரி மாதத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டது.

அதனைக் கட்டுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட இறுக்கமான நடவடிக்கைகளின் மூலம் கடந்த மார்ச் மாதமளவில் தொற்றுப் பரவல் கணிசமானளவிற்குக் கட்டுப்படுத்தப்பட்டது என்றும் சுட்டிக் காட்டினார்.

மேலும் ஏப்ரல் மாதத்தில் சிங்கள, தமிழ் புது வருடத்தின் பின்னரான காலப்பகுதியில் மீண்டும் தொற்றாளர்களின் எண்ணிக்கை கணிசமானளவிற்கு அதிகரித்தது. அது கடந்த மே மாத நடுப்பகுதியில் உச்சத்தை அடைந்ததுடன் நாளொன்றில் பதிவாகும் தொற்றாளர்களின் எண்ணிக்கை 3000 - 3500 வரை உயர்வடைந்தது.

இருப்பினும் அதிலிருந்து தற்போது வரையான காலப்பகுதியில் தொற்றுப் பரவலைப் படிப்படியாகக் கட்டுப்படுத்தி நாளொன்றில் பதிவாகும் தொற்றாளர்களின் எண்ணிக்கையை 1500 - 2000 ஆகக் குறைவடையச் செய்ய முடிந்திருக்கின்றது என்றும் வைத்திய நிபுணர் சமித கினிகே தெரிவித்துள்ளார்.

ஆயிரத்திற்கும் குறைவான தொற்றாளர்கள் - 'அசாதாரண நிலைமை'

எனினும் கடந்த இரு தினங்களில் நாளொன்றில் ஆயிரத்திற்கும் குறைவான தொற்றாளர்களே இனங்காணப்பட்டார்கள். அது அசாதாரணமானதும் ஏற்றுக் கொள்ளப்பட முடியாததுமான நிலையாகும்.

அக்காலப்பகுதியில் சுகாதாரப் பணியாளர்களால் மேற்கொள்ளப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கையின் காரணமாக மாதிரிகளைப் பெறுவதிலும் பரிசோதனைகளை மேற்கொள்வதிலும் முடிவுகளை வெளியிடுவதிலும் ஏற்பட்ட தாமதமும் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அத்தகைய வீழ்ச்சியேற்படுவதற்குப் பங்களிப்புச் செய்திருக்கக்கூடும் என்று குறிப்பிட்டுள்ள அவர், கடந்த இரு தினங்களில் பதிவான அசாதாரண வீழ்ச்சியைத் தவிர, உண்மையில் வழமையான இனங்காணப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியொன்று ஏற்பட்டுள்ளது.

அதன் காரணமாக தொற்றுப் பரவல் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டு விட்டது என்று பொதுமக்கள் தவறாகப் புரிந்து கொள்ளக் கூடாது.

ஆகவே தொடர்ந்தும் சுகாதாரப் பாதுகாப்பு வழிகாட்டல்களைப் பின்பற்றுவதன் ஊடாகவே இந்நிலையை மேலும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடியும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இந்தியாவின் நிலை எமக்கும் ஏற்படலாம்

கொவிட்-19 வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேலும் அவதானத்துடன் முன்னெடுக்கப்பட வேண்டும். அவ்வாறில்லாவிட்டால் இந்தியாவிற்கு நேர்ந்த கதியையே இலங்கையும் எதிர்கொள்ள வேண்டியேற்படும். 

மேலும் எதிர்வரும் இரு வார காலத்தில், இனங்காணப்படக் கூடிய 100 தொற்றாளர்களில் 5 பேரின் நிலை கவலைக்கிடமானதாக மாறக்கூடிய வாய்ப்புக்கள் காணப்படுகின்றன.

அவர்களில் 2 சதவீதமானோர் உயிரிழப்பதற்கான அச்சுறுத்தல் நிலையும் உள்ளது என்று இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர் விசேட வைத்தியநிபுணர் பத்மா குணரத்ன எச்சரித்துள்ளார்.

முதியோர் இல்லங்களில் வசிப்போருக்குத் தடுப்பூசி வழங்க வேண்டும்

நாடளாவிய ரீதியில் உள்ள முதியோர் இல்லங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட பகுப்பாய்வின்போது, முதியோர் இல்லங்களில் வசிக்கும் வயது முதிர்ந்தவர்கள் வெளியே செல்லும் சந்தர்ப்பங்கள் மிகக்குறைவானவை என்பதால், அவர்களுக்கு விரைவாகத் தடுப்பூசியை வழங்கத் தேவையில்லை என்ற நிலைப்பாட்டிலேயே அநேகமான முதியோர் இல்லங்களின் உரிமையாளர்கள் இருக்கின்றார்கள்.

ஆகவே பிரதேச வைத்திய அதிகாரியிடமோ அல்லது பொதுச் சுகாதாரப் பரிசோதகரிடமோ அனுமதியைப் பெற்று, உரிய திட்டமொன்றின் ஊடாக முதியோர் இல்லங்களில் வசிக்கும் வயது முதிந்தவர்களைத் தடுப்பூசி வழங்கல் நிலையங்களுக்கு அழைத்துச் செல்வதற்கு அனைத்து முதியோர் இல்ல உரிமையாளர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுகாதார அமைச்சின் கீழ் இயங்கும் இளம் மற்றும் வயது முதிர்ந்த விசேட தேவையுடையவர்களுக்கான பிரிவின் பணிப்பாளர் நாயகம் வைத்திய நிபுணர் தீபா சன்னஜீவ வலியுறுத்தியுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றாளர்களும் மரணங்களும்

இந்நிலையில் இன்று புதன்கிழமை மாலை 7 மணி வரையான காலப்பகுதியில் 678 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டிருப்பதுடன் 38 கொவிட்-19 மரணங்களும் பதிவாகியுள்ளன. இவை நேற்று செவ்வாய்கிழமை பதிவானவையாகும். 

அதன்படி நாடளாவிய ரீதியில் அடையாளங்காணப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 268,111 ஆக உயர்வடைந்திருப்பதுடன், நேற்று காலை 10 மணி வரையான தகவல்களின்படி அவர்களில் 238,131 பேர் முழுமையாக குணமடைந்துள்ளனர். மேலும் 25,989 தொற்றாளர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

வைத்தியசாலைகளிலுள்ள கட்டில்களின் எண்ணிக்கை

நாடளாவிய ரீதியிலுள்ள 224 சிகிச்சை வழங்கல் மத்திய நிலையங்களில் தொற்றாளர்களுக்கென 32,303 கட்டில்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

அவற்றில் 22,391 கட்டில்களில் தொற்றாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அவசர சிகிச்சைப் பிரிவுகளில் உள்ள 77 கட்டில்கள் பாவனைக்கு எடுக்கப்பட்டுள்ளன.

அதேவேளை செவ்வாய்கிழமை வெளியிடப்பட்ட தகவல்களின்படி, அதற்கு முன்னரான 24 மணி நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கை 5063 ஆகும்.

No comments:

Post a Comment