(நா.தனுஜா)
பயங்கரவாத தடைச் சட்டத்தை மீளாய்வு செய்யுமாறு நாம் வலியுறுத்தியபோது எம்மை 'துரோகிகள்' என்றும் 'நாட்டுப்பற்று அற்றவர்கள்' என்றும் கூறியவர்கள், அதேவிடயத்தை மேற்குலகம் வலியுறுத்தும்போது மாத்திரம் 'மன்னித்து விடுங்கள் நீங்கள் கூறியதை செய்து முடித்து விட்டோம்' என்று கூறிக் கொண்டே உடனடியாக நிறைவேற்றுகின்றார்கள் என மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
பிமல் ரத்நாயக்க அவரது டுவிட்டர் பக்கத்தில் மேலும் கூறியிருப்பதாவது 'பயங்கரவாத தடைச் சட்டத்தை மீளாய்வு செய்யுமாறு நாம் கோரியபோது துரோகிகள், நாட்டுப்பற்று அற்றவர்கள், மேற்குலக நாடுகளிடமிருந்து நிதியைப் பெறுபவர்கள் என்றும் மாட்டைக் கொல்வது போன்று கொல்ல வேண்டும் என்று கூறினார்கள்.
ஆனால் இப்போது பயங்கரவாத தடைச் சட்டத்தை மீளாய்விற்கு உட்படுத்தித் திருத்தங்களை மேற்கொள்ளுமாறு மேற்குலகம் கேட்கும்போது, 'ஆம் சார், மன்னித்து விடுங்கள் சார், ஆயிரம் தடவை மன்னிப்புக் கோருகின்றோம் சார், கூறியதை செய்து முடித்து விட்டோம் சார்' என்று கூறியவாறு அதனை நிறைவேற்றுகின்றார்கள்.
பயங்கரவாத தடைச் சட்டத்தை மீளாய்வு செய்வதற்கு எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைகள் மற்றும் நல்லிணக்கப் பொறிமுறையில் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றம் ஆகியவை தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இலங்கை அறிவித்திருக்கிறது' என்று பிமல் ரத்நாயக்க அவரது பதிவில் சுட்டிக் காட்டியிருக்கிறார்.
No comments:
Post a Comment