ஒரு சில அதிகாரிகள் எடுக்கும் தவறான முடிவுகளால் மக்கள் வீதியில் இறங்கி போராட வேண்டிய சூழல் : இலங்கையின் பொருளாதாரத்தை நிமிர்த்த ஜனாதிபதி முதல் அரசாங்கம் சுயநல அரசியலை கைவிட வேண்டும் - சார்ள்ஸ் நிர்மலநாதன் - News View

Breaking

Wednesday, July 14, 2021

ஒரு சில அதிகாரிகள் எடுக்கும் தவறான முடிவுகளால் மக்கள் வீதியில் இறங்கி போராட வேண்டிய சூழல் : இலங்கையின் பொருளாதாரத்தை நிமிர்த்த ஜனாதிபதி முதல் அரசாங்கம் சுயநல அரசியலை கைவிட வேண்டும் - சார்ள்ஸ் நிர்மலநாதன்

தமது சொந்த நலனுக்காக ஒரு சில அதிகாரிகள் எடுக்கும் தவறான முடிவுகளால் மக்கள் வீதியில் இறங்கி போராட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

வவுனியா புதிய சின்னப்புதுக் குளம் பகுதியில் செயற்பட்டு வரும் கற்குவாரியால் அந்தப்பகுதி மக்கள் பல்வேறு ஆபத்துக்களை எதிர்நோக்கியுள்ளனர். இது தொடர்பாக நேற்றையதினம் குறித்த கிராமத்திற்கு விஜயம் செய்த பாராளுமன்ற உறுப்பினர் பாதிக்கப்பட்ட மக்களுடன் கலந்துரையாடிவிட்டு ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், குறித்த பகுதியில் உள்ள கற்குவாரியால் கிராம மக்கள் பல்வேறு உளவியல் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இந்த பகுதி மக்கள் விவசாயத்தையே நம்பி வாழ்கின்றனர். எனவே இந்த மக்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கும் விதத்தில் இந்த கற்குவாரி செயற்பட்டு கொண்டிருக்கின்றது. மக்கள் நலன்சார்ந்து துறைசார்ந்த அதிகாரிகள் செயற்படாமையே இதற்கு முக்கிய காரணம்.

தங்களுடைய சொந்த நலனுக்காக ஒருசில அதிகாரிகள் எடுக்கும் தவறான முடிவுகளால் மக்கள் வீதியில் இறங்கி போராட வேண்டிய சூழல் இருக்கிறது. அப்படியான ஜனநாயக போராட்டங்களை கூட கொவிட் தடுப்பு சட்டங்களை காட்டி அரசாங்கம் ஒடுக்கி வருகின்றது.

குறித்த காணிக்கான உரிமையாளர் உரிமை பத்திரத்தையும் வைத்திருக்கும் நிலையிலும் குறித்த காணி கற்குவாரிக்காக வழங்கப்பட்டுள்ளது. இது மக்களின் வாழ்வையும், வாழ்வாதாரத்தையும் மிகவும் பாதிக்கின்றது. இதனை நிறுத்துவதற்கு அரசும் துறைசார் அதிகாரிகளும் முழுமையாக செயற்பட வேண்டும்.

அத்துடன் நிதி அமைச்சராக பதவி ஏற்றுள்ள பசில் ராஜபக்ச கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் முதல் தற்போதுவரை அரசாங்கத்தின் முக்கிய பதவிகளில் செயற்பட்டிருந்தார். அவருடைய நிர்வாகத்திலேயே அரசின் சகல செயற்பாடுகளும் இடம்பெற்றிருந்தது. அவர் தற்போது நிதி அமைச்சராக பதவி ஏற்பதால் இலங்கையின் பொருளாதாரத்தை மீட்க முடியும் என்று நான் நம்பவில்லை.

இலங்கையின் பொருளாதாரத்தை நிமிர்த்த வேண்டுமாக இருந்தால் ஜனாதிபதி முதல் அரசாங்கத்தை சார்ந்தவர்கள் தமது சுயநல அரசியலை கைவிட வேண்டும், பணம் உழைப்பதை விடுத்து மக்கள் நலன்சார்ந்து சிந்தித்தால் மாத்திரமே அது சாத்தியமாகும்.

2020 ஆம் ஆண்டு யூன் மாதம் இறக்குமதி செய்யப்பட்ட சீனியில் மிகப்பெரிய பணத்தினை பெற்றதாக ஜனாதிபதி மீது குற்றச்சாட்டுக்கள் இருக்கிறது. அவர் மீதே இப்படி குற்றச்சாட்டுக்கள் இருக்கும் போது அவரது பிள்ளைகள் மருமக்கள், உறவினர்கள் அமைச்சர்களாக இருக்கும் போது நாட்டை முன்னேற்ற முடியும் என்ற நம்பிக்கை எனக்கில்லை.

அரசில் தனிப்பட்டவர்களின் செயற்பாடு காரணமாக தமிழ் மக்கள் மாத்திரமல்ல சிங்கள மக்களும் பட்டிணிசாவை எதிர்கொள்ளும் மிகப்பெரிய ஆபத்தினை எதிர்நோக்கியுள்ளனர் என்றார்.

No comments:

Post a Comment