தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்கள் மாத்திரம்தான் பேருந்துகளில் பயணம் செய்ய முடியுமென அறிவிக்கவில்லை : பொதுப் போக்கு வரத்தில் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார வழிகாட்டல் நாளை வெளியிடப்படும் - News View

Breaking

Thursday, July 29, 2021

தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்கள் மாத்திரம்தான் பேருந்துகளில் பயணம் செய்ய முடியுமென அறிவிக்கவில்லை : பொதுப் போக்கு வரத்தில் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார வழிகாட்டல் நாளை வெளியிடப்படும்

(இராஜதுரை ஹஷான்)

கொவிட்-19 தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்கள் மாத்திரம்தான் பேருந்துகளில் பயணம் செய்ய முடியும் என போக்குவரத்து திணைக்களம் இதுவரையில் அறிவிக்கவில்லை. பொதுமக்கள் தங்களின் சுய பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்வது அவசியமாகும். மாகாணங்களுக்கிடையிலான பொதுப் போக்கு வரத்து சேவை ஆரம்பிக்கும்போது கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல் குறித்த வழிகாட்டல் சுகாதார தரப்பினரால் நாளை வெளியிடப்படும் என போக்கு வரத்து திணைக்கள பிரதி பொது முகாமையாளர் எ.எச் பண்டுக தெரிவித்தார்.

ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதியிலிருந்து மாகாணங்களுக்கிடையிலான பொதுப் போக்கு வரத்து சேவை மீள ஆரம்பித்தல் தொடர்பில் வினவியபோது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், கொவிட்-19 தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்கள் மாத்திரம்தான் அரச மற்றும் தனியார் பேருந்துகளில் பயணம் செய்ய முடியும் என்று சுகாதார தரப்பினரோ, போக்கு வரத்து அமைச்சோ இதுவரையில் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கவில்லை. தடுப்பூசி செலுத்திக் கொண்டால் கொவிட் வைரஸ் தொற்றாது என்று குறிப்பிடப்படவில்லை.

பொதுமக்கள் தங்களின் சுய பாதுகாப்பை எந்நிலையிலும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். சுய பாதுகாப்பிற்கு சுகாதார தரப்பினர் தொடர்ந்து வழிநடத்துவார்கள் என்பதை எதிர்பார்க்க முடியாது. தற்போதைய சூழ்நிலையில் பெரும்பாலான மக்கள் கொவிட்-19 தடுப்பூசிகளை பெற்றுக் கொண்டுள்ளார்கள்.

நாளை மறுதினம் முதல் மாகாணங்களுக்கிடையிலான பொதுப் போக்கு வரத்து சேவை மீள ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. பொதுப் போக்கு வரத்து சேவையில் பின்பற்ற வேண்டிய சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல் தொடர்பிலான வழிகாட்டல் நாளை சுகாதார தரப்பினரால் வெளியிடப்படும்.

பொதுப் போக்கு வரத்து சேவையினை பயன்படுத்தும் பயணிகள் சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களை பின்பற்றாமல் பொறுப்பற்ற வகையில் செயற்படுவதை காண முடிகிறது. ஒரு சிலரது பொறுப்பற்ற செயற்பாடுகளினால் ஒட்டு மொத்த மக்களும் பாதிக்கப்படுவார்கள் என்றார்.

No comments:

Post a Comment