பயங்கரவாத தடைச் சட்டத்தை முற்றாக நீக்கி, ஐரோப்பிய ஒன்றியத்தின் வரிச் சலுகையை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் - எம்.உதயகுமார் - News View

Breaking

Post Top Ad

Thursday, July 8, 2021

பயங்கரவாத தடைச் சட்டத்தை முற்றாக நீக்கி, ஐரோப்பிய ஒன்றியத்தின் வரிச் சலுகையை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் - எம்.உதயகுமார்

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)

நாட்டில் கையிருப்பில் இருக்கும் அன்னியச் செலாவணி எதிர்வரும் 3 மாதங்களுக்கே போதுமானது. இவ்வாறான நிலையில் ஜீ.எஸ்.பி. வரிச் சலுகையும் இல்லாமல் பாேனால் அது நாட்டின் பொருளாதாரத்தில் பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் என எம். உதயகுமார் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற வர்த்தக அமைச்சின் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சட்டத்தின் கீழ் ஏற்றுமதி இறக்குமதி தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், நாட்டின் ஏற்றுமதி, இறக்குமதி பொருளாதாரத்தில் முக்கிய அம்சமாகும். ஏற்றுமதி குறைந்து இறக்குமதி அதிகரித்தால் அது நாட்டின் பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். ஆனால் அரசாங்கம் சில பொருட்களுக்கு இறக்குமதிக்கான தடையை ஏற்படுத்தி ஒருசிலருக்கு அதற்கான அனுமதியை வழங்கி, அவர்களுக்கு லாபம் ஈட்டும் வகையில் நடவடிக்கை எடுத்திருக்கின்றது.

அரசாங்கம் சில வர்த்தக பொருட்கள் இறக்குமதி செய்வதை தடை செய்திருக்கின்றது. இது வெளிநாடுகளுடன் பகையை ஏற்படுத்தாமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். வர்த்தகம் என்பது ஒருவழி பாதை அல்ல என்பதை தெரிவித்து ஐராேப்பிய ஒன்றியம் உட்பட சில நாடுகள் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருப்பதை அரசாங்கம் மறந்துவிடக்கூடாது.

அத்துடன் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் அன்னிய செலாவணி முக்கிய பங்களிக்கின்றது. அதுவும் ஏற்றுமதி இறக்குமதியிலேயே தங்கி இருக்கின்றது. ஆனால் எமது நாட்டின் அன்னிய செலாவணி மிகவும் வீழ்ச்சியடைந்து செல்வதை காணக்கூடியதாக இருக்கின்றது.

நாட்டில் தற்போது கையிருப்பில் இருக்கும் அன்னிய செலாவணி வெறும் 4 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும். இது எதிர்வரும் 3 மாதங்களுக்கே இறக்குமதி செலவினங்களுக்கு போதுமாக இருக்கின்றது. ஆப்கானிஸ்தான் நாட்டைவிட குறைந்த அன்னிய செலாவணியை பெறும் நாடாக இலங்கை மாறி இருக்கின்றது.

இவ்வாறான நிலையில் ஐராேப்பிய ஒன்றியத்தின் ஜீ.எஸ்.பி. வரிச் சலுகையும் நிறுத்தப்பட்டால் மேலும் பாதிப்பு ஏற்படும். அதனால் பயங்கரவாத தடைச் சட்டத்தை முற்றாக நீக்கி விட்டு ஐரோப்பிய ஒன்றியத்தின் வரிச் சலுகையை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

அத்துடன் இந்த சட்டத்தின் கீழ் நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகள் மற்றும் மலையக இளைஞர்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad