இலங்கையில் சீரற்ற காலநிலை : இருவர் உயிரிழப்பு, மூவரைக் காணவில்லை : ஐந்து மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை - News View

About Us

About Us

Breaking

Saturday, July 10, 2021

இலங்கையில் சீரற்ற காலநிலை : இருவர் உயிரிழப்பு, மூவரைக் காணவில்லை : ஐந்து மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

(இராஜதுரை ஹஷான்)

இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரையில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், 3 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ, தென், மத்திய மற்றும் வட மேல் மாகாணங்களில் அவ்வபோது சில நேரங்களில் இடியுடனான மழை பெய்ய கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

பெரும்பாலான பகுதிகளில் 100 மில்லி மீற்றர் அளவில் மழை வீழ்ச்சி பதிவாக கூடும் என வளிமண்டல திணைக்களம் அறிவித்துள்ளது.

வடக்கு மாகாணத்தில் ஒரு சில பகுதிகளில் மழை பெய்யும். மத்திய மலைகளின் மேற்கு சரிவில் 60 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். சில நேரங்களில் 50 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும். வடக்கு, வட-மத்திய,  வடமேற்கு, மேற்கு மற்றும் தெற்கு மாகாணங்கள் திருகோணமலை மாவட்டத்திலும் மழை பெய்யகூடும்.

சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் பல பகுதிகளில் சிறு அளவிலான வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ள அதேவேளை மண்மேடுகளும் சரிந்து விழுந்துள்ளன. குறிப்பாக கேகாலை, நுவரெலியா, காலி, இரத்தினபுரி, களுத்துறை ஆகிய பகுதிகளில் வெள்ளப் பெருக்கு அபாயம் ஏற்பட்டுள்ளன.

பிரதான வீதிகள், தாழ் நில பகுதிகள் வெள்ளப் பெருக்கு நீரினால் மூழ்கியுள்ளன. அதேவேளை பல இடங்களில் மண்மேடுகள் சரிந்து விழுந்துள்ளதால் மலையகத்துக்கான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளன.

நாட்டின் பல பகுதிகளில் நேற்று இரவு வீசிய கடும் காற்றுடனான வானிலை காரணமாக பல்வேறு இடங்களில் பல சேதங்கள் ஏற்பட்டுள்ளன. புத்தளம், குருநாகல், கேகாலை, கண்டி, களுத்துறை ஆகிய பகுதிகளில் மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளன.

மலைநாட்டில் பெய்து வரும் அடைமழையால் நீர்த் தேக்கங்களின் நீர் மட்டமும் வெகுவாக அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் மேல் கொத்மலை நீர்த் தேக்கத்தின் மூன்று வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

நேற்று அதிகாலை ஒரு வான் கதவு திறக்கப்பட்ட நிலையில் நீர் மட்டம் அதிகரித்ததால் இன்று காலை மேலும் இரு வான் கதவுகள் திறக்கப்பட்டன.

மேல் கொத்மலை அணைக்கட்டுக்கு கீழ் ஆற்றுப்பகுதியை பயன்படுத்துபவர்கள் அவதானமாக இருக்குமாறு கோரப்பட்டுள்ளது.

சீரற்ற காலநிலை காரணமாக காலி, களுத்துறை, கேகாலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் உள்ள பல பிரதேச செயலக பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இம் மாவட்டங்களில் உள்ள 10 பிரதேச செயலக பிரிவுகளுக்கு முதல் கட்ட அபாய எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், களனி, களு, ஜின் மற்றும் நில்வளா கங்கைகளின் நீர் மட்டம் உயர்ந்துள்ளதாகவும் பல பகுதிகளில் ஆறுகள் பெருக்கெடுத்துள்ளதாகவும் நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஆற்றின் இரு புறமும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெள்ள நிலைமை குறித்து மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

களனி கங்கையின் மேல் மற்றும் மத்திய பகுதிகளில் இதுவரை 150 மி.மீ க்கும் அதிகமான மழை பெய்துள்ளது. இதன் காரணமாக தெஹியோவிட, ருவான்வெல்லை, சீதாவத, தொம்பே, கடுவலை, பியகம, கொலன்னாவை மற்றும் வத்தளை பிரதேச செயலகங்களில் உள்ள களனி கங்கையின் தாழ்வான பகுதிகளில் சிறிய வெள்ளப் பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment