ஏனைய தரப்புக்கள் மீது பழிசுமத்துவதைத் தவிர்த்து, உடனடித் தீர்வைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - அரசாங்கத்தை வலியுறுத்தும் கரு ஜயசூரிய - News View

About Us

About Us

Breaking

Saturday, July 10, 2021

ஏனைய தரப்புக்கள் மீது பழிசுமத்துவதைத் தவிர்த்து, உடனடித் தீர்வைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - அரசாங்கத்தை வலியுறுத்தும் கரு ஜயசூரிய

நா.தனுஜா

நாடளாவிய ரீதியில் உணவுப் பொருட்களின் விலைகளில் அதிகரிப்பு ஏற்படும்போது, வர்த்தகர்கள் பொருட்களைப் பதுக்கி வைப்பதே அதற்குக் காரணம் என்று ஏனைய தரப்புக்களின் மீது பழிசுமத்துவதை அரசாங்கம் நிறுத்திக் கொள்ள வேண்டும். பொருட்களின் விலை கொள்கைகளில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்து, பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வைப் பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் சபாநாயகரும் சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவருமான கரு ஜயசூரிய வலியுறுத்தியிருக்கிறார்.

அண்மைக் காலத்தில் பொருட்களின் விலையேற்றம் முக்கிய பிரச்சினையாக மாறியிருக்கும் பின்னணியில், இது குறித்து கரு ஜயசூரிய அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 

அப்பதிவில் அவர் மேலும் கூறியிருப்பதாவது, நாட்டில் சுகாதார நெருக்கடி நிலையொன்று காணப்படும் சூழ்நிலையில், சுகாதாரப் பணியாளர்கள் தமது தொழிற்சங்க நடவடிக்கையை முடிவிற்குக் கொண்டுவருவதற்கு மேற்கொண்ட தீர்மானம் பெரிதும் வரவேற்கத்தக்கதாகும்.

அதேவேளை சுகாதாரப் பணியாளர்கள் எதிர்கொண்டிருக்கும் பிரச்சினைகளுக்கும் உடனடியாகத் தீர்வைப் பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதுடன் அவர்களின் அர்ப்பணிப்பான சேவையைப் பாராட்டுவதற்கும் முன்வர வேண்டும் என்று அவர் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் நாடளாவிய ரீதியில் உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கும்போது, வர்த்தகர்கள் பொருட்களை சந்தைக்குக் கொண்டுவராமல் பதுக்கி வைப்பதே அதற்குக் காரணமென அரசாங்கம் குற்றஞ்சாட்டுகின்றது.

உணவுப் பொருட்கள் தொடர்பான ஆணையர், நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகள் மற்றும் இராணுவ அதிகாரிகளை அவமதிக்கும் செயலாகும் கரு ஜயசூரிய சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்தோடு இவற்றுக்கு உடனடியாகத் தீர்வைப் பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர, ஏனைய தரப்புக்கள் மீது பழிசுமத்துவதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறியிருக்கும் அவர், கொள்கைகளில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்து பிரச்சினைகளை உரியவாறு கையாள வேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கின்றார்.

No comments:

Post a Comment