அஸ்ட்ராசெனிகா இரண்டாம் கட்டத் தடுப்பூசியை வழங்க நடவடிக்கை - விபரங்கள் குறுஞ்செய்தி மூலம் அனுப்பி வைக்கப்படும் - News View

About Us

About Us

Breaking

Tuesday, July 6, 2021

அஸ்ட்ராசெனிகா இரண்டாம் கட்டத் தடுப்பூசியை வழங்க நடவடிக்கை - விபரங்கள் குறுஞ்செய்தி மூலம் அனுப்பி வைக்கப்படும்

(நா.தனுஜா)

கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட தடுப்பூசி வழங்கல் நிலையங்களில் அஸ்ட்ராசெனிகா முதலாம் கட்டத் தடுப்பூசியைப் பெற்றுக் கொண்ட 55 - 69 வயதிற்குட்பட்டவர்களுக்கு எதிர்வரும் வாரத்திற்குள் இரண்டாம் கட்டத் தடுப்பூசியை வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக கொழும்பு மாநகரத்திற்குப் பொறுப்பான பிராந்திய தொற்று நோய்த் தடுப்பு வைத்திய நிபுணர் தினு குருகே தெரிவித்துள்ளார்.

அஸ்ட்ராசெனிகா தடுப்பூசிகளுக்கு ஏற்பட்ட பற்றாக்குறையின் காரணமாக, அதனை முதலாம் கட்டமாகப் பெற்ற பெருமளவானோர் இரண்டாம் கட்டத் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வதில் தாமதத்தை எதிர்கொண்டனர். அதேவேளை அஸ்ட்ராசெனிகா முதலாம் கட்டத் தடுப்பூசியைப் பெற்றுக் கொண்ட 70 வயதிற்கு மேற்பட்டோருக்கு அஸ்ராசெனிகா இரண்டாம் கட்டத் தடுப்பூசியை வழங்குவதற்கு அண்மையில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட தடுப்பூசி வழங்கல் நிலையங்களில் அஸ்ராசெனிகா முதலாம் கட்டத் தடுப்பூசியைப் பெற்றுக் கொண்ட 55 - 69 வயதிற்கு இடைப்பட்டோருக்கு எதிர்வரும் ஒரு வார காலத்திற்குள் இரண்டாம் கட்டத் தடுப்பூசி வழங்கப்பட்டவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கொழும்பு மாநகரத்திற்குரிய பிராந்திய தொற்று நோய்த் தடுப்பு வைத்தியநிபுணர் தினு குருகே அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கின்றார்.

அவரது பதிவின்படி கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட தடுப்பூசி வழங்கல் நிலையங்களில் அஸ்ட்ராசெனிகா முதலாம் கட்டத் தடுப்பூசியைப் பெற்றவர்களுக்கு எதிர்வரும் 5 - 6 நாட்களுக்குள் இரண்டாம் கட்டத் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வதற்கு எப்போது, எங்கே வருகை தர வேண்டும் என்ற விபரங்கள் குறுஞ்செய்தி மூலம் அனுப்பி வைக்கப்படும்.

குறுஞ் செய்தியைப் பெற்றுக் கொள்ளக் கூடியவாறான கையடக்கத் தொலைபேசி வசதியை கொண்டிராதவர்களுக்கு தொலைபேசி அழைப்பின் ஊடாக மேற்படி விபரங்கள் அறிவிக்கப்படும். 

அதுமாத்திரமன்றி குறுஞ் செய்தியோ அல்லது தொலைபேசி அழைப்போ கிடைக்கப் பெறாதவர்கள் பதற்றமடையத் தேவையில்லை என்றும் அவர்களுக்கென பிரத்யேக நாளொன்று அறிவிக்கப்படும் என்றும் வைத்திய நிபுணர் தினு குருகே தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment