முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் எவரும் அமைச்சுப் பதவிகளை எதிர்பார்க்கவில்லை...! அழைப்பு விடுத்தால் கட்சியுடன் பேசி ஒரு தீர்க்கமான முடிவிற்கு வருவோம் - News View

About Us

About Us

Breaking

Friday, July 2, 2021

முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் எவரும் அமைச்சுப் பதவிகளை எதிர்பார்க்கவில்லை...! அழைப்பு விடுத்தால் கட்சியுடன் பேசி ஒரு தீர்க்கமான முடிவிற்கு வருவோம்

‘தற்பொழுது பேசு பொருளாக மாறியுள்ள இலங்கையின் புதிய அமைச்சரவை மாற்றத்தின் போது ஐக்கிய மக்கள் சக்தியில் அங்கத்துவம் வகிக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் அமைச்சுப் பதவிகளை எதிர்பார்க்கவில்லை’ எனவும் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் சுகாதாரத்துறை இராஜாங்க அமைச்சருமான பைசால் காசிம் தெரிவித்தார். 

நிந்தவூர் ஆதார வைத்தியசாலையின் கொவிட்-19 சிகிச்சை விடுதியினை திறந்து வைத்த பின்னர் தினகரன் ஊடகவியலாளர் கேட்ட கேள்விக்கு பைசால் காசிம் எம்.பி கூறுகின்றார்

கேள்வி
அடுத்த இரண்டு வாரமளவில் அமைச்சரவையில் மாற்றம் இடம்பெறப் போவதாக தகவல்கள் வெளிவருகின்றன. முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவியோ அல்லது இராஜாங்க அமைச்சுப் பதவியோ கிடைக்கவுள்ளதாக அரசியல் அரங்கில் சிலர் கூறுகின்றனர். அதிலும் குறிப்பாக தங்களுக்கு இராஜாங்க அமைச்சுப் பதவி வழங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது பற்றி என்ன கூறுகின்றீர்கள்?

பதில்
உண்மையில் இந்த அரசாங்கத்தை நாம் ஆட்சிக்குக் கொண்டு வரவில்லை. ஆனால் நாட்டின் நன்மைகருதி 20 ம் திருத்த சட்ட மூலத்திற்கு ஆதரவு வழங்கினோம். அதற்காக அமைச்சுப் பதவிகளைக் கேட்டு நாம் ஒரு போதும் செல்லவில்லை. இந்த ஆதரவுதான் எமக்கும் அரசாங்கத்திற்குமுள்ள ஒரு இடைவெளியை நிரப்பக் கூடியதாக உள்ளது என நாம் நம்புகின்றோம். ஆகவே இவ்வாறான காலகட்டத்தில் நாங்கள் அமைச்சுப் பதவியினை எதிர்பார்க்கவில்லை. இது சம்பந்தமாக நாம் இன்னும் ஒரு தீர்மானத்திற்கும் வரவில்லை. இருந்தாலும், அரசாங்கத்தின் தீர்மானம் எப்படி இருக்கின்றது என்பது தெரியவில்லை. எதிர்காலத்தில் அது பற்றிச் சிந்திப்போம். எனக்கு தனியாக இராஜாங்க அமைச்சுப் வழங்கப்படுவது பற்றிய செய்தி தவறானது.

கேள்வி
அமைச்சுப் பதவியினை பொறுப்பேற்கும்படி அரசாங்கம் அழைப்பு விடுத்தால் அதனை ஏற்றுக் கொள்வீர்களா..?

பதில்
அவ்வாறு ஒரு சந்தர்ப்பம் கிடைக்குமாகவிருந்தால் எமது கட்சியுடன் நாம் பேசி ஒரு தீர்க்கமான முடிவிற்கு வருவோம் என நினைக்கின்றோம்.

No comments:

Post a Comment