மக்களின் அடிப்படை பிரச்சினைக்கு உடன் தீர்வு காணும் வகையில் நிதியமைச்சர் செயற்பட வேண்டும் - பெ.இராதாகிருஷ்ணன் - News View

Breaking

Friday, July 23, 2021

மக்களின் அடிப்படை பிரச்சினைக்கு உடன் தீர்வு காணும் வகையில் நிதியமைச்சர் செயற்பட வேண்டும் - பெ.இராதாகிருஷ்ணன்

நாட்டு மக்கள் அனைத்து வகையிலும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி பஷில் ராஜபக்ஷ நிதியமைச்சராக பொறுப்புக்களை ஏற்றுள்ளார். எனவே காலம் கடத்தாது மக்களுக்கு நிவாரணங்களை வழங்கவும் கொவிட் முடக்கத்தில் தொழில்களை இழந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு மாற்றுத்திட்டங்களை உருவாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் பிரதியமைச்சர் பெ.இராதாகிருஷ்ணன் வலியுறுத்தினார்.

இது குறித்து அவர் தொடர்ந்தும் கூறுகையில், கொவிட் முடக்கம் இலங்கையை மாத்திரமல்ல முழு உலகையும் பாதித்துள்ளது என்பது அனைவரும் அறிந்த விடயமே. இருந்தாலும் அதனை காரணம் காட்டி மக்கள் மீது பொருளாதார சுமைகளை சுமத்துவது ஏற்புடையதல்ல.

நிதி அமைச்சு பொறுப்புகளை ஏற்றுள்ள பஷில் ராஜபக்ஷ மக்கள் பிரச்சினைகைள நன்கு அணுக கூடியவர். இலங்கையின் முப்பதாண்டு கால உள்நாட்டு போர் 2009 ஆம் ஆண்டில் முடிவுக்கு கொண்டு வந்த போது வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளை மையப்படுத்தி வடக்கின் வசந்தம் போன்று சிறப்பு பொருளாதார திட்டங்களை முன்னெடுத்திருந்தார்.

இவ்வாறு காலப்போக்கிலும் மக்களின் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு காண்பதில் தற்போதைய நிதியமைச்சர் அன்று செயற்பட்டிருந்தார்.

எனவே கொவிட் தொற்றில் அனைத்து வாழ்வாதாரத்தையும் இழந்துள்ள நாட்டு மக்களின் அடிப்படை தேவைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படுவது அவசியம்.

ஆசிரியர்கள், விவசாயிகளின் பிரச்சினை மற்றும் மாணவர்களின் கல்வி சார் பிரச்சினை என பல துறைகளிலும் நாடு நெருக்கடிகளை சந்தித்து வருகின்றது. இதனடிப்படையில் பல பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு காணப்பட வேண்டும் என்பதே எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

நாட்டின் தற்போதைய நிலைமைகளை புரிந்துக்கொண்டு மக்கள் நல திட்டங்களை உடன் முன்வைத்து அவற்றை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். பொறுப்பற்று செயற்படும் அதிகாரிகள் குறித்து தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டும். அப்போதுதான் மக்கள் மத்தியில் நம்பிக்கையை கட்டியெழுப்ப முடியும் என தெரிவித்தார்.

No comments:

Post a Comment