கிளிநொச்சி, அறிவியல் நகர் யாழ் பல்கலைக்கழக வளாகத்துக்கு தண்ணீரை பெற்றுக் கொள்ள ஏற்பாடு : உறுதி செய்தார் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா - News View

Breaking

Post Top Ad

Thursday, July 15, 2021

கிளிநொச்சி, அறிவியல் நகர் யாழ் பல்கலைக்கழக வளாகத்துக்கு தண்ணீரை பெற்றுக் கொள்ள ஏற்பாடு : உறுதி செய்தார் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

கிளிநொச்சி, அறிவியல் நகர் யாழ். பல்கலைக்கழக வளாகத்துக்கு, புலிக் குளத்திலிருந்து தண்ணீரை வாய்க்கால் மூலம் பெற்றுக் கொள்வதற்கான ஏற்பாடுகளை, மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவரும், கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா உறுதி செய்தார்.

முன்னதாக 2013 ஆம் ஆண்டு, யாழ் பல்கலைக்கழகத்துக்கென அறிவியல் நகர் பகுதியில் 568 ஏக்கர் காணியை அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் பேசிப் பெற்றுக் கொடுத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தற்போது பல்கலைக்கழகத்துக்கான நீர் விநியோகத்துக்கான ஏற்பாடுகளையும் செய்து கொடுத்துள்ளார்.

புலிக் குளத்திலிருந்து அறிவியல் நகர் வளாகத்துக்கு வாய்க்கால் மூலம் தண்ணீர் பெற்றுக் கொள்ளும் திட்டத்திற்கான கோரிக்கை, அறிவியல் நகர் யாழ் பல்கலைக்கழக வளாகத்தினரால் யாழ் பல்கலைககழக பேரவை உறுப்பினரும், கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவரின் மேலதிக இணைப்பாளருமான கோ.றுஷாங்கன் மூலம், ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவர், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

இந்தக் கோரிக்கையை நீர்ப்பாசனத்துறை அமைச்சர் சமல் ராஜபக்ஷவிடம் கடந்த ஏப்ரல் மாதம் சமர்ப்பித்து அதற்கான அனுமதியை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பெற்றிருந்தார்.

இந்தத் திட்டம் பின்னர் கிராமிய வயல் நிலங்கள் மற்றும் அண்டியுள்ள குளங்கள், நீர்த் தேக்கங்கள் மற்றும் நீர்ப்பாசன அபிவிருத்தி இராஜாங்க அமைச்சிடம் அமைச்சர் சமல் ராஜபக்ஷவால் ஒப்படைக்கப்பட்டு, குறித்த அமைச்சின் செயலாளர் அண்மையில் புலிக் குளம் பகுதிக்கு நேரில் சென்று குளத்தைப் புனரமைப்பதற்கான திட்டம் குறித்து ஆராய்ந்திருந்தார்.

80 மில்லியன் ரூபா மதிப்பீடு செய்யப்பட்டிருந்த இந்தத் திட்டத்தை உடனடியாக கட்டம் கட்டமாக நடைமுறைப்படுத்தும் வகையில், முதற்கட்டமாக குளத்திலிருந்து அறிவியல் நகர் பல்கலைக்கழக வளாகம் வரையிலான வாய்க்காலை புனரமைப்பது என தீர்மானிக்கப்பட்டு, இதற்கென 15 மில்லியன் ரூபா இராஜாங்க அமைச்சினால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சுமார் இரண்டு கிலோ மீற்றர் நீளத்துக்கு இவ்வாறு வாய்க்கால் மூலம் நீர் அறிவியல் நகர் பல்கலைக்கழக வளாகத்துக்கு எடுத்துவரப்படும்போது, இடையில் உள்ள மலையாளபுரம், பொன்னகர் ஆகிய கிராமங்களின் நிலத்தடி நீர் வளமும் அதிகரித்து கிணறுகளில் நீர்க் கொள்ளளவும் கூடும்.

இந்தத் திட்டத்தின் முன்னேற்ற நிலை குறித்து, மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவரும், கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா, கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் நேற்று (14.07.2021) விசேட கலந்துரையாடல் ஒன்றை நடாத்தியிருந்தார்.

கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் றூபவதி கேதீஸ்வரன், யாழ் பல்கலைக்கழகத்தின் பொறியியல், விவசாய, தொழில்நுட்ப பீடங்களின் பீடாதிபதிகள், முன்னாள் பீடாதிபதிகள், தோட்ட முகாமையாளர் உள்ளிட்டவர்களுடன், மாவட்ட பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர், கமநல சேவைத் திணைக்கள உதவி ஆணையாளர், பிராந்திய விவசாய ஆராய்ச்சி மையப் பிரதிப் பணிப்பாளர், துணுக்காய் பிரதேச செயலாளர் உள்ளிட்டோர் இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டு முன்னேற்ற நிலை குறித்த விளக்கங்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு வழங்கினர்.

இதன்போது, புலிக் குளத்திலிருந்து அறிவியல் நகர் வளாகத்துக்குப் பெறப்படும் நீர், விவசாய பீடத்தின் விவசாய முயற்சிகளுடன், பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும், விடுதியில் தங்கியிருக்கும் மாணவர்களின் குடிநீர் தேவையையும் நிறைவு செய்யும் வகையில் திட்டமிடப்பட வேண்டும் என்று, பிராந்திய விவசாய ஆராய்ச்சி நிலையப் பிரதிப் பணிப்பாளர், விஞ்ஞானி கலாநிதி அரசகேசரி சுட்டிக்காட்டியதை, பல்கலைக்கழக பீடாதிபதிகள் உள்ளிட்ட அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.

ஏற்கனவே அறிவியல் நகர் பல்கலைக்கழகத்தில் உள்ள நிலத்தடி நீரைப் பெற்றுக் கொள்ளும் வசதிகள் கோடை காலத்தில் தடைப்பட்டு சிரமங்கள் எதிர்கொள்ளப்பட்டு வருவதால், புலிக் குளத்திலிருந்து பெறப்படும் நீரைக் குடிநீர்த் தேவைக்கும் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் நீர் சுத்தீகரிப்புத் தொகுதியும் அமைக்கப்பட வேண்டும் என்று இதன்போது வலியுறுத்தப்பட்டது.

இதற்கு மேலதிகமாக, புலிக் குளத்தை அண்டிய விவசாய வயல் நிலமான சுமார் 150 ஏக்கர் நிலப்பரப்பையும் அறிவியல் நகர் பல்கலைக்கழக வளாகத்துக்கே வழங்கி, பொதுமக்களுடன் இணைந்த விவசாய நடவடிக்கையில் பல்கலைக்கழகம் ஈடுபடுவது என்றும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.

தற்போது விவசாய பீடத்தின் பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்படும் காணியின் மண் தரத்தை அதிகரிப்பதற்கென கிளிநொச்சி அம்பாள் நகர் அல்லது பொருத்தமான பகுதியிலிருந்து சுமார் 50 டிப்பர் கொள்ளளவு வளமான மண்ணைப் பெற்றுக் கொடுப்பதற்கு நீர்ப்பாசன திணைக்களப் பிரதிப் பணிப்பாளர் ராஜகோபு மற்றும் கமலந சேவைகள் பிரதி ஆணையாளர் தேவரதன் ஆகியோர் இதன்போது இணக்கம் தெரிவித்தனர்.

மேலும், விவசாய பீடத்தின் பயிர்ச் செய்கை நடவடிக்கையை மேற்கொள்வதற்குத் தேவையான ஆளணியை அதிகரிக்க வேண்டுமென விவசாயபீட தோட்ட முகாமையாளர் ஸ்ரீதரன் கோரிக்கை விடுத்தார்.

குறித்த கலந்துரையாடலின்போது, பிரஸ்தாபிக்கப்பட்ட அனைத்து கோரிக்கைகளையும் எழுத்து மூலம் இந்த வாரத்துக்குள் சமர்ப்பிக்குமாறும், அதனை சம்மந்தப்பட்ட அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று தேவையான ஏற்பாடுகளை செய்து தருவதாகவும் இதன்போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பல்கலைக்கழக பீடாதிபதிகளிடம் உறுதியளித்தார்.

இந்தத் திட்டம் நிறைவேற்றப்படும்போது, அறிவியல்நகர் பல்கலைக்கழக சமூகம் மாத்திரமன்றி, அயல் கிராமங்களான பொன்னநகர் மற்றும் மலையாளபுரம் ஆகிய பகுதிகளின் நீர்வளமும் அதிகரித்து, அந்தக் கிராமங்களின் மக்களும் அதிக பயனடைவர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad