பசில் ராஜபக்ஷ தேசியப்பட்டியல் ஆசனத்திற்கு நியமிக்கப்பட்டிருப்பதானது அரசியலமைப்பையும் மக்களின் இறையாண்மையையும் முற்றிலும் புறக்கணிக்கும் செயற்பாடாகும் : மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் - News View

About Us

About Us

Breaking

Thursday, July 8, 2021

பசில் ராஜபக்ஷ தேசியப்பட்டியல் ஆசனத்திற்கு நியமிக்கப்பட்டிருப்பதானது அரசியலமைப்பையும் மக்களின் இறையாண்மையையும் முற்றிலும் புறக்கணிக்கும் செயற்பாடாகும் : மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம்

(நா.தனுஜா)

பாராளுமன்றத் தேர்தலின் போது பொதுஜன பெரமுனவினால் சமர்ப்பிக்கப்பட்ட மாவட்ட ரீதியான வேட்பாளர் பட்டியல் மற்றும் தேசியப்பட்டியல் ஆகியவற்றில் பெயர் உள்ளடக்கப்பட்டிருக்காத பசில் ராஜபக்ஷ, தற்போது வெற்றிடமாகியிருக்கும் தேசியப்பட்டியல் ஆசனத்திற்கு நியமிக்கப்பட்டிருப்பதானது அரசியலமைப்பையும் மக்களின் இறையாண்மையையும் முற்றிலும் புறக்கணிக்கும் செயற்பாடாகும். அதுமாத்திரமன்றி இரட்டைப் பிரஜாவுரிமையைக் கொண்டிருந்தமையினால் பசில் ராஜபக்ஷ பாராளுமன்ற உறுப்பினராகும் தகுதியை இழந்திருந்தார் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும் என்று மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் சுட்டிக்காட்டியிருக்கிறது.

'பொதுஜன பெரமுனவினால் செய்யப்பட்டிருக்கும் தேசியப்பட்டியல் நியமனத்தின் அரசியலமைப்பிற்கு அமைவான தன்மை' என்ற தலைப்பில் மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. 

அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது, பாராளுமன்ற உறுப்பினரான ஜயந்த கெட்டகொட இராஜினாமா செய்தமையைத் தொடர்ந்து வெற்றிடமாகியிருக்கும் தேசியப்பட்டியல் ஆசனத்திற்கு பசில் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் அவதானம் செலுத்தியிருக்கின்றோம். 

அரசியலமைப்பின் 99 ஏ சரத்தின் பிரகாரம் பாராளுமன்ற உறுப்பினராவதற்குத் தகுதி பெற்றவர்களின் (தேசியப்பட்டியல்) பட்டியலில் பசில் ராஜபக்ஷவின் பெயர் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை. 

அதேபோன்று கடந்த 2020 ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலின் போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் சமர்ப்பிக்கப்பட்ட மாவட்ட அடிப்படையிலான பட்டியலிலும் பசில் ராஜபக்ஷவின் பெயர் உள்ளடங்கியிருக்கவில்லை. இவ்வாறானதொரு பின்னணியில் பசில் ராஜபக்ஷவின் நியமனம் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. 

ஏனெனில் கடந்த பாராளுமன்றத் தேர்தலின்போது, இரட்டைப் பிரஜாவுரிமையைக் கொண்டிருந்தமையினால் பாராளுமன்ற உறுப்பினராகும் தகுதியை பசில் ராஜபக்ஷ இழக்க வேண்டியேற்பட்டது. 

ஆகவே வெற்றிடமாகியிருக்கும் தேசியப்பட்டியல் ஆசனத்திற்கு பசில் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டமையானது இலங்கை மக்களின் இறையாண்மையைப் புறக்கணிப்பதாக அமைந்திருக்கும் அதேவேளை, நாட்டின் அரசியலமைப்பையும் மீறும் செயலாகும் என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment