(எம்.மனோசித்ரா)
கல்கிஸை பிரதேசத்தில் 15 வயது சிறுமியை பாலியல் தொழிலுக்காக விற்பனை செய்வதற்கான விளம்பரத்தை இணையத்தளத்தில் பிரசுரித்த இணையத்தள உரிமையாளர் மற்றும் அதன் நிதி நிர்வாகியாக செயற்பட்டு வந்த நபர் ஆகியோர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த இணையத்தளத்தின் உரிமையாளரான பாணந்துரை - நல்லுருவ பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.
இதேபோன்று இந்த இணையத்தளத்தின் நிதி நிர்வாகியாக செயற்படும் பிலியந்தர, மாவித்தர - அலுபோலந்த பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயதுடைய பிரிதொரு சந்தேநபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்ற விசாரணைப் பிரிவின் தொலைதொடர்பாடல் பிரிவினரால் குறித்த இரு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கல்கிசை பிரதேசத்தில் 15 வயது சிறுமியை பாலியல் தொழிலுக்காக இணையத்தளம் மூலம் விற்பனை செய்த விவகாரம் தொடர்பில் இதுவரையில் இரு பெண்கள் உள்ளிட்ட 26 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான விசாரணைகள் கல்கிஸை பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு பின்னர் சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டன. அதற்கமையவே குறித்த 26 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

No comments:
Post a Comment