கிழக்கு மாகாணத் தமிழ் ஆசிரியர் சங்கமும் போராட்டத்தில் இணைந்து கொள்கின்றது - News View

Breaking

Post Top Ad

Sunday, July 11, 2021

கிழக்கு மாகாணத் தமிழ் ஆசிரியர் சங்கமும் போராட்டத்தில் இணைந்து கொள்கின்றது

ஏ.எச்.ஏ. ஹுஸைன் 

கிழக்கு மாகாணத் தமிழ் ஆசிரியர் சங்கமும் உடனடியாக இணைய வழிக்கற்பித்தலில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளது.

இது தொடர்பாக கிழக்கு மாகாண தமிழ் ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சிவக்கொழுந்து ஜெயராஜா ஞாயிற்றுக்கிழமை 111.07.2021 அறிக்கையொன்றை விடுத்துள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நாட்டின் சுகாதாரப் பாதுகாப்புக் கருதி அரசினால் கொண்டுவரப்பட்ட தனிமைப்படுத்தல் சட்டமானது, இன்று அரச எதிர்ப்புத் தொழிற்சங்க முன்னெடுப்பிற்கு எதிராகப் பயன்படுத்தப்படுவது தொழிற்சங்க நடவடிக்கைக்கு எதிரான உரிமை மீறலும் கண்டனத்துக்குரியதுமாகும்.

அதிபர் ஆசிரியர்களின் ஒன்றிணைந்த கூட்டமைப்பு ஜோன் கொத்தலாவல பல்கலைக்கழகம் சம்பந்தமாக அரசினால் கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு எதிராகவும் மற்றும் ஏற்றுக் கொள்ளக் கூடிய காரணங்களின் நிமித்தம் மேற்கொள்ளப்பட்ட போராட்டங்களின்போது இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உட்பட 31 தொழிற் சங்கப் பிரதிநிதிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டதன் பின்னர் எந்தவித காரணமும் இன்றி தனிமைப்படுத்தல் சட்டத்தின்கீழ் முல்லைத்தீவில் தனிமைப்படுத்தியமை அரச அடக்குமுறையின் உச்சக்கட்டமாகவே கருத முடியும்.

அரச வைத்தியர்களின் 02 நாட்களுக்கு மட்டும் மேற்கொள்ளப்பட்ட பணிப்பகிஸ்கரிப்பிற்காக அவர்களின் 07 அம்சக் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட ஜனாதிபதி 42 வருடங்களாகப் போராடி வரும் அதிபர் ஆசிரியர்களின் கோரிக்கையைக் கண்டுகொள்ளாதிருப்பது ஏன்?

அன்பார்ந்த அதிபர் ஆசிரியர்களே இந்நிலையைத் தொடர விடமுடியாது.

ஆகவே அனைத்து ஆசிரியர்களும் அதிபர்களும் உடனடியாக இணைய வழிக்கற்பித்தலில் இருந்து விலகிக் கொள்ள வேண்டும். கட்டணம் அறவிட்டு மேற்கொள்ளப்படும் இணைய வழிக் கற்பித்தலும் நிறுத்தப்பட வேண்டும்.

அத்தோடு பொதுப் பரீட்சைக்கு வேண்டிய நிர்வாக ரீதியான ஒத்துழைப்பு வழங்காது அதிபர் ஆசிரியர்கள் எமது ஒன்றிணைந்த எதிர்ப்புப் போராட்டத்தில் இணைந்து கொள்ள வேண்டும் என ஒன்றிணைந்த அதிபர் ஆசிரியர்களின் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும் எமது சம்பள முரண்பாட்டை முன்நிறுத்திப் போராட்டத்தில் குதிப்போம் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad